மாணவர்கள் கவனத்திற்கு…பள்ளிக்கு செல்போன் எடுத்து வர தடை;மீறினால் நடவடிக்கை!
வேலூர் மாவட்டம் தொரப்பாடி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மேசை உடைக்கப்பட்டது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது.இதனைத் தொடர்ந்து, மேசை உடைக்கப்பட்டது தொடர்பாக பன்னிரெண்டாம் வகுப்பை சேர்ந்த 10 மாணவர்களை மே 5 ஆம் தேதி வரை தற்காலிகமாக நீக்கம் செய்து நேற்று அம்மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில்,வேலூரில் பள்ளி வகுப்பறைக்குள் மாணவர்கள் செல்போன் எடுத்து வர தடை விதித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.
மேலும்,உத்தரவை மீறி வகுப்பறைக்குள் செல்போனை மறைத்து எடுத்து வரும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே,இந்தியாவில் 52% மாணவர்கள் செல்போன்களை படிப்பதற்கு பதிலாக மெசேஜ் அனுப்பவும்,சமூக ஊடகங்களில் நேரத்தை செலவிட மட்டுமே பயன்படுத்துகிறார்கள் என்று அண்மையில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.