முரசொலி நில வழக்கு – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உயர்நீதிமன்றத்தில் மனு!

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வேலூரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய முன்னாள் தமிழக பாஜக மாநில தலைவரான எல்.முருகன் அவர்கள்,திமுகவின் முரசொலி அலுவலகம் பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டது என்று கூறியதால் சர்ச்சை எழுந்தது.

இதனையடுத்து,சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் எல்.முருகன் மீது திமுக சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது.இதற்கிடையில்,தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன்,கடந்த ஆண்டு மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை,கால்நடை பராமரிப்பு, மீன்வளம் துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

இதனையடுத்து,எம்பிக்கள் வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு இவ்வழக்கு மாற்றப்பட்டது.பின்னர்,நீதிமன்றத்தில் ஆஜராகும்படி பலமுறை உத்தரவிடப்பட்டபோதும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆஜராகாத நிலையில்,நேற்று முன்தினமும் நேரில் ஆஜராகும்படி அவருக்கு உத்தரவிடப்பட்டது.ஆனால், அப்போதும் அவர் ஆஜராகவில்லை.இதனால்,வருகின்ற மே 2 ஆம் தேதிக்கு வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டு,மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில்,முரசொலி நிலம் தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாமல் இருக்க விலக்கு அளிக்க கோரி மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.