இஸ்ரோவுக்கு இந்தி இனிக்கும், தமிழ் கசக்குமா? – சு.வெங்கடேசன் எம்.பி
இஸ்ரோவுக்கு இந்தி இனிக்கும், தமிழ் கசக்குமா? மகேந்திரகிரி வளாகத்தில் நடந்த எழுத்துத்தேர்வில் தமிழ் புறக்கணிப்பு என சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட்.
மகேந்திரகிரி இஸ்ரோ வளாகத்தில் நடந்த எழுத்துத்தேர்வில் தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இந்த பாரபட்சத்தை கைவிட வேண்டும் என்றும், தமிழ்வடிவ கேள்வித்தாளுடன் மறுதேர்வு நடத்த வேண்டும் என்றும் சு. வெங்கடேசன் எம்.பி இஸ்ரோ இயக்குனருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், ‘தமிழகத்தில் மகேந்திரகிரியில் இயங்கி வரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி உந்தும வளாகம், இரண்டு பணி நியமன அறிவிக்கைகளை வெளியிட்டு எழுத்துத் தேர்வுகளை கடந்த 10.04.2022 அன்று சென்னையிலும், நாகர்கோவிலிலும் நடத்தியுள்ளது.
அது “சி” பிரிவு, “பி” பிரிவு பதவிகளுக்கான நியமனத் தேர்வுகள் ஆகும். அவை அனைத்துமே சாதாரண நிலையில் இருந்து பணியாற்றும் ஊழியர்களுக்கான தேர்வு. எழுத்துத் தேர்வில் தான் அதிர்ச்சி காத்திருந்தது. லகுரக வாகன ஓட்டுநர், சமையலர் பதவிகளுக்கான தேர்வு கேள்வித் தாள்களில் மட்டுமே தமிழ் வடிவமும் இடம் பெற்றிருந்தது. மற்ற பதவிகளுக்கான தேர்வு கேள்வித் தாள்கள் இந்தி/ஆங்கிலத்தில் மட்டுமே இருந்தன. பொருத்துபவர் (Fitter), பற்ற வைப்பவர் (Welder) போன்ற பதவிகளும் அதில் அடக்கம்.
பெரும்பாலான தேர்வர்கள் ஐ.டி.ஐ பட்டயப் படிப்பு முடித்தவர்களே. தமிழ் வழிக் கல்வியில் வந்தவர்கள். ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகங்களை சார்ந்தவர்கள். எழுத்துத் தேர்வில் தமிழ் புறக்கணிப்பு என்பது தமிழ் வழிக் கல்வி மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அப்பட்டமான பாரபட்சம். அநீதி. இது அவர்களுக்கு சமதள போட்டிச் சூழலையும் மறுப்பது ஆகும். இது சரி செய்யப்பட வேண்டும். எனவே, தமிழ் வடிவக் கேள்வித்தாளுடன் மறு தேர்வை நடத்த வேண்டுமென அக்கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.
தான் எழுதிய கடிதத்தை பதிவிட்டு, ‘இஸ்ரோவுக்கு இந்தி இனிக்கும், தமிழ் கசக்குமா? மகேந்திரகிரி வளாகத்தில் நடந்த எழுத்துத்தேர்வில் தமிழ் புறக்கணிப்பு. ஃபிட்டருக்கு இந்தி எதற்கு? பாரபட்சத்தை கைவிட்டு, தமிழ்வடிவ கேள்வித்தாளுடன் மறுதேர்வு நடத்து.’ என்றும் பதிவிட்டுள்ளார்.
இஸ்ரோவுக்கு இந்தி இனிக்கும்,
தமிழ் கசக்குமா?மகேந்திரகிரி வளாகத்தில் நடந்த எழுத்துத்தேர்வில் தமிழ் புறக்கணிப்பு.
ஃபிட்டருக்கு இந்தி எதற்கு?
பாரபட்சத்தை கைவிட்டு,
தமிழ்வடிவ கேள்வித்தாளுடன் மறுதேர்வு நடத்து.இயக்குனருக்கு சு. வெங்கடேசன் எம் பி கடிதம்.@isro #HindiImposition pic.twitter.com/Nvf6lfcAB1
— Su Venkatesan MP (@SuVe4Madurai) April 20, 2022