ஆளுநருக்கு கருப்புக் கொடி – முதல்வர் ஸ்டாலின் விளக்கம்!
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்தவுடன் நடைபெற்ற முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.ஆனால்,அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் காலம் தாழ்த்தினார்.
கிடப்பில் போட்ட ஆளுநர்:
அதன்பின்னர்,இந்த ஆண்டு மீண்டும் தமிழக சட்டப் பேரவையில் நீட் விலக்கு சட்ட முன்வரைவு நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.எனினும்,அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் கிடப்பில் போட்டுள்ளார்.இதனால்,முதல்வர் மற்றும் அமைச்சர்கள் நேரில் சென்று ஆளுநரிடம் வலியுறுத்தியிருந்தனர்.
தேநீர் விருந்து:
இதனைத் தொடர்ந்து,கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சியினருக்கும் ஆளுநரின் தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.ஆனால் நீட் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருவதை கண்டித்து திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் இந்த தேநீர் விருந்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.
ஆளுநர் மாளிகையில் கவனிப்பாரின்றி நீட் விலக்கு மசோதா:
இதனையடுத்து,நீட் விலக்கு மசோதா,கடந்த 210 நாட்களாக ஆளுநர் மாளிகையில் கவனிப்பாரின்றி உள்ளது என்றும்,இந்த சூழலில் அதே மாளிகைக்கு சென்று ஆளுநரின் தேநீர் விருந்தில் கலந்து கொள்வது தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாகும்.இதனால்தான் தமிழக அரசு இந்த தேநீர் விருந்தில் கலந்து கொள்ளவில்லை என்றும்,மற்றபடி ஆளுநர் மீது எப்போதும் மரியாதை உண்டு என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார்.
ஆளுநருக்கு எதிர்ப்பு:
இந்த சூழலில்,ஆளுநர் ஆர்.என்.ரவி தருமபுரம் 27-வது ஆதீன நிகழ்ச்சியில் பங்கேற்க நேற்று மயிலாடுதுறை சென்றிருந்தார்.ஆனால்,ஆளுநருக்கு எதிர்ப்புத் தெரிவித்து சில அரசியல் கட்சியினர் கருப்புக் கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.அதுமட்டுமல்லாமல்,தருமபுர ஆதீனம் அவர்களை சந்தித்துவிட்டு ஆளுநர் திரும்பியபோது,மன்னப்பந்தல் என்ற இடத்தில் சிலர் கற்களையும்,கருப்புக் கொடி கம்பங்களையும் கொண்டு அவர் சென்ற வாகனங்களின் மீது வீசியதாக கூறப்படுகிறது.
இதற்கு,பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்,ஈபிஎஸ் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.ஆனால்,அவற்றில் எந்த உண்மையும் இல்லை,ஆர்ப்பாட்டகாரர்கள் முன் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது என்று காவல்துறை தெரிவித்தது.
முதல்வர் விளக்கம்:
இந்த நிலையில்,மயிலாடுதுறையில் ஆளுநருக்கு கருப்புக் கொடி காட்டப்பட்டது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் விளக்கமளிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.பணி செய்ய விடாமல் தடுத்ததாக ஆளுநர் தரப்பில் தமிழக டிஜிபிக்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில் முதல்வர் விளக்கமளிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.