முக கவசம் அணிய வேண்டியது அவசியம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழ்நாட்டில், முகக்கவசம் அணிவது விலக்கிக் கொள்ளப்படவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.
சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கொரோனா தொற்று பரவலை தடுக்க, பொதுமக்கள் முகக்கவசம் அணிவது அவசியம். தமிழ்நாட்டில், முகக்கவசம் அணிவது விலக்கிக் கொள்ளப்படவில்லை, அபராதம் மட்டும்தான் விலக்கு அளித்துள்ளோம். தேவைப்பட்டால் மெகா தடுப்பூசி முகாம் நடத்த மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசியது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்தியா மட்டும் அல்ல உலகம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ச்சியாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்திலும் கொரோனா பரவல் சற்று அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டாலும், தடுப்பூசி செலுத்தாதவர்கள் உடனடியாக தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தமிழ்நாட்டில் 1.4 கோடி பேர் உரிய நேரத்தில் 2ம் தவணை தடுப்பூசியும், 54 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசியும் செலுத்திக்கொள்ளாமல் உள்ளனர் என்று தெரிவித்த அமைச்சர், இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் குழுவினர், அருகில் அரசு மருத்துவமனை இருந்தும் அழைத்து செல்லாமல், தனியார் மருத்துவமனையில் அனுமதித்தால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.