#IPL2022: சதத்தை தவறவிட்ட டு பிளெசிஸ்.. லக்னோ அணிக்கு 182 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் தொடரின் இன்று நடைபெற்ற லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூர் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது.
ஐபிஎல் தொடரில் தற்பொழுது நடைபெற்று வரும் 31-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய பெங்களூர் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அனுஜ் ராவத் – டு பிளெசிஸ் களமிறங்கினார்கள்.
இதில் 4 ரன்கள் எடுத்து அனுஜ் ராவத் தனது விக்கெட்டை இழக்க, அடித்த பந்திலே விராட் கோலி டக் அவுட் ஆகினார். அவரைதொடர்ந்து மேக்ஸ்வெல் களமிறங்க, டு பிளெசிஸுடன் இணைந்து அதிரடியாக ஆடத்தொடங்கினார். ஆனால் இந்த கூட்டணி, நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 11 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து மேக்ஸ்வெல் வெளியேற, பின்னர் களமிறங்கிய சூர்யா பிரபுதேசாய் 10 ரன்கள் அடித்தும், ஷாபாஸ் அகமது 26 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து பெங்களூர் அணி திணறி வந்த நிலையில், தினேஷ் கார்த்திக் களமிறங்கினார். மறுமுனையில் சதம் அடிக்கும் முனைப்புடன் சிறப்பாக ஆடிவந்த டு பிளெசிஸ் 96 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழந்தார். இறுதியாக பெங்களூர் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது. 182 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி களமிறங்கவுள்ளது.