#BREAKING: ஆளுநர் தேநீர் விருந்து – தமிழ்நாடு அரசு புறக்கணிப்பு!
ஆளுநர் மாளிகையில் நடக்கும் விழாவையும் தமிழக அரசு புறக்கணிப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு.
தமிழ் புத்தாண்டையொட்டி ராஜ்பவனில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று மாலை நடைபெறும் தேநீர் விருந்துக்கு அரசியல் கட்சிகளுக்கு தமிழக ஆளுநர் ஆர்என் ரவி அழைப்பு விடுத்திருந்தார். ஆளுநர் தேநீர் விருந்தை, சிபிஐ, சிபிஎம், காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிப்பதாக அக்கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்திருந்தனர். இருப்பினும் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது.
இந்த சமயத்தில் இன்று ஆளுநர் ஆர்என் ரவியை, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன் திடீர் சந்திப்பு நிகழ்ந்தது. நீட் விலக்கு மசோதா, நுழைவுத்தேர்வு உள்ளிட்ட நிலுவையில் உள்ள பல்வேறு மசோதாக்கள் குறித்து உடனே ஒப்புதல் வழங்ககோரி வலியுறுத்தியதாக கூறப்பட்டது. இந்த நிலையில், ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை தமிழ்நாடு அரசு புறக்கணிப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு, ஆளுநரை சந்தித்த பிறகு செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார்.
இதனால் ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் முதலமைச்சர் பங்கேற்கமாட்டார் என்றும் ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்பது தமிழக மக்களின் உணர்வை புண்படுத்துவதாக அமையும் என்பதால் புறக்கணிக்கப்படுகிறது எனவும் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் ஆளுநர் மாளிகையில் நடக்கும் விழாவையும் தமிழக அரசு புறக்கணிப்பதாகவும் குறிப்பிட்டார்.