டிப்ளமோ படித்தவர்களுக்கு ஓர் நற்செய்தி – அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
முதலமைச்சரின் இரு கண்களாக இருப்பது கல்வியும், சுகாதாரமும் தான் என பேரவையில் அமைச்சர் புகழாரம்.
தமிழக சட்டமன்றத்தில் பதிலுரையின் போது பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர், இனி டிப்ளமோ படித்தவர்களும், Lateral Entry மூலம் அண்ணா பல்கலைக்கழகத்தில் சேரலாம் என அறிவித்தார். அதாவது, பாலிடெக்கனிக் முடித்த மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் 2ம் ஆண்டு சேரலாம் என தெரிவித்தார். பாலிடெக்கனிக் கல்லூரிகளில் 5 புதிய பாட பிரிவுகள் தொடங்கப்படும் என்றார்.
6 முதல் 12ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்த 6 லட்சம் மாணவிகளின் உயர்கல்விக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட உள்ளது. தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பயிலும் சிறைக்கைதிகள், திருநங்கைகள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு கட்டண விலக்கு அளிக்கப்படும். தொழிற்சாலைகளில் பணிபுரியும் பட்டயப் படிப்பு படித்தவர்களுக்கு, பணிபுரிந்து கொண்டே பொறியியல் பட்டம் பயில்வதற்கான திட்டம் உருவாக்கப்படும் என்றும் அறிவித்தார்.
வரும் கல்வியாண்டில் 10 புதிய கலை & அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும். 56 அரசு கலை & அறிவியல் கல்லூரிகளின் உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும் எனவும் பதிலுரையில் தெரிவித்த அமைச்சர், 41 உறுப்புக் கல்லூரிகள், விரைவில் அரசுக் கல்லூரிகளாக மாற்றப்படும் எனவும் கூறினார். மேலும், பெண்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடுபவர் தமிழ்நாடு முதலமைச்சர் என்றும் கல்வியும், சுகாதாரமும் முதலமைச்சரின் இரு கண்களாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.