பள்ளி நேரத்தை மாற்றியமைக்க கோரிக்கை! – தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மாநிலத் தலைவர்!
பள்ளி நேரத்தை காலை 7.30 மணியிலிருந்து 12.30 மணி மாற்றியமைக்குமாறு முதலமைச்சருக்கு கோரிக்கை.
தமிழகத்தில் வெயிலின் தாக்கத்தால் பள்ளி குழந்தைகள் பாதிக்கப்படுவதை தடுக்க மே மாதம் தேர்வு முடியும் வரை பள்ளி நேரத்தை காலை 7.30 மணியிலிருந்து 12.30 மணி மாற்றியமைக்குமாறு முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மாநிலத் தலைவர் இளமாறன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மாநிலத் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த காலங்களை காட்டிலும் வெயிலின் தாக்கம் இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து அதிகமாக உள்ளது. நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலை கருத்தில் கொண்டு மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் இயங்கும் நேரம் சில மாநிலங்களில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் ஆந்திர மாநிலத்தில் காலை 8 மணி முதல் 11 மணி வரை பள்ளி நேரமாக உள்ளது. அதேபோல கர்நாடகாவில் தேர்வு வைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது வெயில் 100 டிகிரியை தாண்டியுள்ளது. வரும் நாட்களில் வெயில் உச்சத்தைத் தொடும் என அஞ்சப்படுகிறது.
சுட்டெரிக்கும் வெளியிலின் தாக்கத்தால் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு சரும நோய்கள் குழந்தைகளுக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடலும் உள்ளமும் சரியாக இருந்தால் மட்டுமே கற்றலும் கற்பித்தலும் சிறப்பாக இருக்கும். எனவே இதனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் பள்ளி நேரத்தை மாற்றியமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்