#BREAKING: தமிழகத்தில் அரசு மாதிரி பள்ளி – முதலமைச்சர் அறிவிப்பு!
டெல்லி அரசு மாதிரி பள்ளிபோல தமிழ்நாட்டிலும் பள்ளிகளை உருவாக்க போகிறோம் என முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து பேசினார். அப்போது, டெல்லியில் நவீன வசதிகளுடன் உள்ள அரசு பள்ளியை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் சேர்ந்து, முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் பார்வையிட்டு, அங்குள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார். டெல்லியில் அரசு பள்ளியில் செய்யப்பட்டுள்ள நவீன வசதிகள் குறித்து முதல்வர் ஸ்டாலினுக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
இந்த நிலையில், டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் நவீன (ஸ்மார்ட் வகுப்பு) வசதிகளுடன் உள்ள அரசு மாதிரி பள்ளிகளை பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், டெல்லி அரசு மாதிரி பள்ளிபோல் தமிழ்நாட்டிலும் உருவாக்கி போகிறோம். எல்லா துறையை போல் கல்வி, மருத்துவத்துக்கும் தமிழக அரசு முக்கியத்துவம் அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார். அப்படி நிகழ்ந்தால் தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளின் தரம் உயரும் மற்றும் நவீன வசதிகளுடன் அரசு பள்ளி கள் விளங்கும் என்பது குறிப்பிடப்படுகிறது.
இதனிடையே, டெல்லி அரசு பள்ளியை பார்வையிட்ட முதலமைச்சர், தற்போது அரவிந்த் கெஜ்ரிவாலுடன் சேர்ந்து டெல்லி மெகல்லா கிளினிக்கை பார்வையிட்டு வருகிறார். மெகல்லா கிளினிக் காலை 10 மணி முதல் மதியம் 1 மணிவரை டெல்லியில் செயல்பட்டு வருகிறது. இது மினி மருத்துவமனையாகத்தான் டெல்லியில் பார்க்கப்படுகிறது. ஒரு மருத்துவர் மற்றும் ஒரு செவிலியர் என்ற அடிப்படையில், பொதுமக்களுக்கு காய்ச்சல், உடல் சம்மந்தமான பிரச்சனை உள்ளிட்டவைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இசிஜி உள்ளிட்ட பரிசோதனைகளும் உள்ளது.