#IPL2022: பந்து வீச்சில் மிரட்டிய ஹசரங்க.., சீட்டுக்கட்டு போல சரிந்த கொல்கத்தா..!
கொல்கத்தா அணி 18.5 ஓவர்களில் 128 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி கொல்கத்தாஅணியில் தொடக்க வீரராக ரஹானே, வெங்கடேஷ் இருவரும் களமிறங்கினர். தொடக்கத்தில் அதிரடியாக விளையாடிய வெங்கடேஷ் 4-வது ஓவரில் ஆகாஷ் தீப் வீசிய பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். பின்னர் ரஹானே 9 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அடுத்து களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் வந்த வேகத்தில் இரண்டு பவுண்டரி அடித்தார். இதனால், நிலைத்து நிற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஷ்ரேயாஸ் ஐயர் 13 ரன் எடுத்து வெளியேறினார். பின்னர் களமிறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேற கடைசியில் களமிறங்கிய ஆண்ட்ரே ரஸ்ஸல் அதிரடியாக விளையாடி 25 ரன்கள் குவித்தார். அதில் 3 சிக்சர் ஒரு பவுண்டரி அடங்கும்.
இறுதியாக கொல்கத்தா அணி 18.5 ஓவர்களில் 128 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது. பெங்களூர் அணியில் வனிந்து ஹசரங்க 4 விக்கெட்டும், ஆகாஷ் தீப் 3, ஹர்ஷல் படேல் 2 விக்கெட்டை பறித்தனர்.