இதை செய்தால் ஓட்டுநருக்கு ரூ.10,000 அபராதம் – டெல்லி போக்குவரத்துத்துறை உத்தரவு!
பேருந்துகளை சாலையில் அவற்றுக்கென ஒதுக்கப்பட்ட பாதையில் ஓட்டாத ஓட்டுநருக்கு ரூ.10,000 அபராதம்.
பேருந்துகளை சாலையில் அவற்றுக்கென ஒதுக்கப்பட்ட பாதையில் ஓட்டாத ஓட்டுநருக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என்று டெல்லி போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. ஆனால் அதே தவறை இரண்டாவது முறையாக தவறு செய்தால் ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும். மூன்றாவது முறையாக தவறு செய்தால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும். 4-வது முறையாக விதிமீறல் செய்தால், தனியார் பேருந்துகளின் அனுமதி ரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தப்பட உள்ளது.
மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க டெல்லி போக்குவரத்து துறை வாட்ஸ்அப் எண்ணை வெளியிடும் என்றும் போக்குவரத்து அமைச்சர் கூறினார். பேருந்து ஓட்டுநர் விதிகளை மீறுவதைக் கண்டால் எவரும் எங்களுக்கு வீடியோ அனுப்பலாம். அதை ஆதாரமாகக் கருதி டெல்லி அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கடந்த வாரம், டெல்லி போக்குவரத்து அமைச்சர் கைலாஷ் கெஹ்லோட், டெல்லியில் குறைந்தது 15 சாலைகளில் பேருந்துகள் மற்றும் சரக்கு வண்டிகளுக்கு பாதைகள் ஒதுக்கப்படும் என்று கூறியிருந்தார். மேலும், விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.