சபாஷ்…. சரியான தண்டனை! வில் ஸ்மித்தின் செயல் மிகவும் சரியானது – பாமக நிறுவனர் ராமதாஸ்!

Default Image

ஆஸ்கர் மேடையில் கிரிஸ் ராக்கை, நடிகர் வில் ஸ்மித் அறைந்தது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து.

லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், சிறந்த நடிகருக்கான ‘ஆஸ்கர் விருதை’ வில் ஸ்மித் வென்றார். கிங் ரிச்சர்ட் எனும் படத்தில் நடித்ததற்காக வில் ஸ்மித்திற்கு ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டது. இதனிடையே, சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வழங்கப்படுவதற்கு முன்னதாக வில் ஸ்மித்தின் மனைவியின் ஹேர் ஸ்டைலை கிண்டல் செய்த தொகுப்பாளர் கிறிஸ் ராக் எனும் நடிகரை மேடையில் ஏறி, வில் ஸ்மித் அறைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி சர்வதேச அளவில் டிரெண்டானது.

இதனைத்தொடர்ந்து, ஆஸ்கர் விழாவின் போது நடிகர் கிறிஸ் ராக் என்பவரை அறைந்தது மிகப்பெரிய அளவில் டிரெண்டான நிலையில், சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது கிடைத்ததும் வில் ஸ்மித் கண் கலங்கி அழுதுவிட்டார். தனது மனைவியை பற்றி கேலி செய்ததற்காக ஆஸ்கர் விருது மேடையில் தொகுப்பாளர் கிறிஸ் ராக்கை அறைந்த வில் ஸ்மித், பின்னர் கண்ணீருடன் மன்னிப்பு கேட்டுள்ளார். மேடையில் பேசியபோது வில் ஸ்மித், “Love Will Make You Do Crazy Thing” என உருக்கமாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஆஸ்கர் மேடையில் கிறிஸ் ராக்கை அறைந்தது தொடர்பாக பாமக நிறுவனர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ஹாலிவுட் டால்பி திரையரங்கத்தில் இந்திய நேரப்படி இன்று காலை அகாடமி விருது (ஆஸ்கர் விருது) வழங்கும் விழா நடைபெற்றுக்கொண்டிருந்தது. சிறந்த ஆவணப்படத்திற்கான விருதை வழங்குவதற்காக கிரிஸ் ராக் என்ற நகைச்சுவை நடிகர் மேடையேறினார்.

அப்போது நகைச்சுவை செய்வதாக நினைத்துக் கொண்டு, நடிகர் வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பின்கெட்டின் தலைமுடி பிரச்சினையை கிண்டல் செய்தார். ஜடாவுக்கு alopecia என்ற முடி உதிரும் நோய் இருக்கிறது. கிரிஸ்ராக்கின் நகைச்சுவைக்கு பெரிய வரவேற்பு இல்லை. வில்ஸ்மித்துக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்படுவதால் அதை வாங்குவதற்காக வந்திருந்தார்.

கிரிஸ் ராக்கின் நகைச்சுவையைக் கேட்டு வில்ஸ்மித் ஆரம்பத்தில் சிறிது சிரித்தார். ஆனால், அருகிலிருந்து அவரது மனைவியின் கண்களில் இருந்து கண்ணீர் வழிவதைப் பார்த்து கொதித்துப் போனார். உடனடியாக மேடையில் ஏறிய வில் ஸ்மித் கிரிஸ்ராக்கின் கன்னத்தில் பளார் என அறைந்திருக்கிறார். அவை நாகரிகத்தையெல்லாம் விடுங்கள். வில் ஸ்மித்தின் செயல் மிகவும் சரியானது. கிரிஸ் ராக்கின் செயலுக்கு உடனடியாக சரியான தண்டனை கொடுத்திருக்கிறார்.

அதுமட்டுமல்ல…. ஜடாவை தாம் கிண்டல் செய்ததில் உள்நோக்கமில்லை என்று கிரிஸ்ராக் விளக்கமளித்தபோது அதை ஸ்மித் ரசிக்கவில்லை. அப்போதும் கூட என் மனைவியின் பெயரை உச்சரிக்கக்கூட உனக்குத் தகுதியில்லை என்று பொங்கியிருக்கிறார். அவர் உண்மையான கதாநாயகன். ஒருவரின் உடல் குறையை நகைச்சுவைக்கான கருப்பொருள் ஆக்காதீர்கள். மனைவியையும் அவரின் உணர்வையும் மதித்தால் உலகம் உங்களை மதிக்கும் என்ற இரு உண்மைகளை சொல்லியுள்ளது இந்த நிகழ்வு என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்