மாணவர்கள் ஓடும் பேருந்தில் ஏறுவதும் ஸ்டைல் என நினைக்கிறார்கள்- அமைச்சர் அன்பில் மகேஷ்..!
படிக்கட்டுகளில் மாணவர்கள் பயணிக்காமல் தடுக்கும் பொறுப்பு பெற்றோருக்கு அதிகம் உள்ளது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் நேரடி நியமன வட்டாராக் கல்வி அலுவலர்களுக்கு நிர்வாகத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி துவக்க விழா நாகமலை புதுக்கோட்டையில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளி மாணவர்கள் ஸ்டைலாக செல்ல வேண்டும் என்பதற்காக பேருந்தில் படியில் தொங்கி கொண்டு பயணம் செய்கின்றனர்.
பள்ளி மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் பயணிப்பதும், ஓடும் பேருந்தில் ஏறுவதும் ஸ்டைல் என நினைப்பது வருத்தமளிக்கிறது. மாணவர்களுக்கு எடுத்துச் சொல்லி புரிய வைக்க வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு அதிகமாக உள்ளது. நீட் விவகாரத்தில் தமிழக ஆளுநரை சந்தித்து பேசினோம். விரைவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இது குறித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து பேசுவார்.
அதன் மூலம் நீட் தேர்வுக்கு நல்லதொரு முடிவு எட்டப்படும் என நம்புகிறோம் என தெரிவித்தார்.