கர்நாடகாவால் ஒரு செங்கலை கூட நட முடியாது- அமைச்சர் துரைமுருகன்..!
தமிழகத்தின் அனுமதியின்றி மேகதாதுவில் அணை கட்ட முடியாது என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
காவிரி நீரை பங்கிட்டு கொள்வதில் தமிழகம், கர்நாடகம் இடையே உரிய முடிவு எட்டப்படாமல் தொடர்ந்து சர்ச்சை நிலையே நீடித்து வருகிறது. மேகதாது என்ற இடத்தில் புதிய ஆணை கர்நாடக அரசு முடிவு செய்தது. இதனால், காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்டக்கூடாது என கூறி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு இன்னும் விசாரணையில் உள்ளது.
சமீபத்தில்,மேகதாதுவில் புதிய அணை கட்ட ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யபடும் என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்தார். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் கடந்த 21-ம் தேதி தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கிடையில், தமிழக அரசின் தீர்மானத்துக்கு எதிராக கர்நாடக சட்டப்பேரவையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், மேகதாது அணை கட்டுவதில் கர்நாடக அரசு எவ்வளவு உறுதியாக இருக்கிறதோ, அதை கட்டக்கூடாது என தமிழக அரசும் உறுதியாக உள்ளது. தமிழகத்தின் அனுமதியின்றி மேகதாதுவில் அணை கட்ட முடியாது. கர்நாடகாவால் ஒரு செங்கலை கூட நட முடியாது. மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் கீழ் மாநிலத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் அணைக் கட்டக்கூடாது. உச்சநீதிமன்ற தீர்ப்பை மாநில அரசுகள் பணிந்து நடப்பதுதான் ஜனநாயகம் என தெரிவித்துள்ளது.