“திட்டமிட்டபடி மேகதாதுவில் அணை கட்டப்படும்”- கர்நாடகா முதல்வர் அதிரடி!
மேகதாது அணை விவகாரம் தீவிரமடைந்து வரும் நிலையில்,இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தனி தீர்மானத்தை நேற்று முன்மொழிந்தார்.அப்போது மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பேசிய அவர், 1978 ஆம் ஆண்டு அண்ணா ஆட்சியில் இருந்தபோது மேகதாது குறித்து பேசினார். பின்னர் கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா, போராடினார்கள். பின் எடப்பாடி பழனிச்சாமி போராடினர். தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையில் எடுத்துள்ளார்.
என் மகன், பேரன், கொள்ளுப் பேரன் காலம் வரை மேகதாது பிரச்சனை போகுமென நினைக்கிறேன். காவிரி நடுவர் மன்றம், உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மதிக்காமல் கர்நாடகா மேகதாதுவில் அணை கட்டுவதை ஏற்க முடியாது.மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவதை தடுத்து தமிழ்நாடு சட்டப்பேரவை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மத்திய அரசு அனுமதி அளிக்கக்கூடாது:
மேகதாது அணை திட்டத்திற்கு தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உட்பட எந்த அனுமதியும் மத்திய அரசு அளிக்கக்கூடாது. 2018 உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை செயல்படுத்த காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. தீர்ப்பில் குறிப்பிடாத, மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசின் திட்ட அறிக்கையை பரிசீலிக்கவோ, அனுமதி தரக்கூடாது.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட நிதி ஒதுக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. காவிரியில் எந்தவிதமான நீர் தேக்கத்தையும் கட்டக்கூடாது என கர்நாடகத்திற்கு மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும் என தெரிவித்தார்.
திட்டமிட்டபடி அணை:
இந்நிலையில்,மேகதாதுவில் திட்டமிட்டபடி அணை கட்டப்படும் என்று கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியதாவது:
மக்கள் விரோத முடிவு:
“தமிழக சட்டசபையில் மேகதாது அணை திட்டத்திற்கு எதிராக சட்டத்திற்கு புறம்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.ஒரு மாநிலம் மற்றொரு மாநிலத்தின் உரிமையை ஆக்கிரமிக்கலாம் என்பது மக்கள் விரோத முடிவு.
இந்த முடிவை கர்நாடக அரசும்,மக்களும் வன்மையாகக் கண்டிக்கின்றனர்.மேகதாது திட்டத்தை செயல்படுத்துவதில் எங்களின் முடிவு உறுதியாக உள்ளது.இத்திட்டம் மாநிலத்தில் உற்பத்தியாகும் காவேரி நதியுடன் தொடர்புடையது.
தமிழகத்தில் அரசியல் முடிவு எதுவாக இருந்தாலும்,மேகதாது திட்டத்தை நிறைவேற்ற அனைத்து நடவடிக்கைகளையும் கர்நாடகா அரசு எடுக்கும்”,என்று தெரிவித்துள்ளார்.
ಈ ನಿರ್ಣಯವನ್ನು ಸಮಸ್ತ ಕರ್ನಾಟಕದ ಜನತೆ ಹಾಗೂ ಸರ್ಕಾರ ತೀವ್ರವಾಗಿ ಖಂಡಿಸುತ್ತದೆ. ಮೇಕೆದಾಟು ಯೋಜನೆ ಜಾರಿಗೆ ನಮ್ಮ ನಿರ್ಧಾರ ಅಚಲವಾಗಿದೆ. ಮೇಕೆದಾಟು ಯೋಜನೆ ರಾಜ್ಯದಲ್ಲಿ ಹುಟ್ಟುವ ಕಾವೇರಿ ನದಿಗೆ ಸಂಬಂಧಿಸಿದ್ದಾಗಿದೆ.
2/3— Basavaraj S Bommai (@BSBommai) March 21, 2022