வாய் மூடி மெளனமாக இருந்து தமிழக மக்களுக்கு துரோகம் இழைப்பதை ஏற்க முடியாது – ஈபிஎஸ்

Default Image

மேகதாதுவில் புதிய அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியினை உடனே தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஈபிஎஸ் அறிக்கை 

கர்நாடக மாநில முதலமைச்சர் திரு. பசவராஜ் பொம்மை அவர்கள் தலைமையில் காவேரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டுவது குறித்து விவாதிக்க, அனைத்துக் கட்சிக் கூட்டம் பெங்களூருவில் 18.3.2022 அன்று நடைபெற்றது. அங்கு நடைபெற்ற கூட்டத்தில், உடனடியாக காவேரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டவேண்டும் என்று ஒருமனதாக முடிவெடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும், மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சர் அவர்களை டெல்லியில் நேரில் சந்தித்து, கர்நாடகாவில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் முடிவினை எடுத்துக் கூறி, காவேரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கு மத்திய அரசின் அனுமதியை உடனே வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்க முடிவு செய்துள்ளதாகச் செய்திகள் கூறுகின்றன.

கர்நாடக அரசின் புதிய அணை கட்டும் முயற்சியை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
மேகதாதுவில் அணை கட்டுவதற்காக கர்நாடக அரசு இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.
கர்நாடக அரசு மேகதாதுவில் அணையை கட்டுவதன் மூலம் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய காவேரி நீருக்கு தடை ஏற்ப உணராத இந்த திமுக அரசு, மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்ததற்கும், நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டம் குறித்தும் எந்தவிதமான எதிர்ப்பையும் தெரிவிக்காமல் வாய் மூடி மவுனமாக இருந்து தமிழக மக்களுக்கு துரோகம் இழைப்பதை எக்காரணம் கொண்டும் ஏற்க முடியாது.

தங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு கர்நாடகாவில் உள்ள தொழில்கள் பாதிக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில், இந்த அரசு செயல்படுகிறதோ என்ற எண்ணம் தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

மேகதாது அணை பிரச்சனையில் உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கை இந்த அரசு முறைப்படி நடத்தி, கர்நாடக அரசின் முயற்சிகளைத் தடுத்து நிறுத்த வேண்டும். அம்மாவின் அரசு காவேரி பிரச்சனையிலும், முல்லை பெரியாறு பிரச்சனையிலும், மேகதாது பிரச்சனையிலும் நடத்திய சட்டப் போராட்டங்களை, தொடர்ந்து இந்த அரசு எந்தவிதமான சமரசத்திற்கும் இடம் தராமல், மூத்த சட்ட வல்லுநர்களை நியமித்து தமிழகத்தின் உரிமையினை பாதுகாக்க வேண்டும் என்று இந்த அரசை வுலியுறுத்துகிறேன் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்