பெட்ரோல், டீசல் வரி மூலம் ரூ.23,000 கோடி வருமானம் – முருகானந்தம்
பெட்ரோல், டீசல் வரி மூலம் கடந்த நிதியாண்டில் ரூ.23 ஆயிரம் கோடி வருமானம் கிடைத்துள்ளது என்று தமிழக நிதித்துறை செயலர் முருகானந்தம் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். தமிழக அரசின் முழுமையான பொது பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கலான பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிதித்துறை செயலர் முருகானந்தம், பெட்ரோல், டீசல் வரி மூலம் ரூ.23 ஆயிரம் கோடியும், கனிம வளங்கள் மூலம் ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது என்று தெரிவித்தார்.
மேலும், 2022-23 நிதியாண்டில் டாஸ்மாக் மூலம் ரூ.40 ஆயிரம் கோடி வருவாய் வரும் என எதிர்பார்க்கிறோம். 2021-22 நிதியாண்டில் டாஸ்மாக் மூலம் ரூ.36 ஆயிரம் கோடி வருவாய் வந்ததாகவும் தெரிவித்தார். கடந்த நிதியாண்டை விட 7% முதல் 8% வரை கூடுதல் வருவாய் டாஸ்மாக் மூலம் கிடைத்துள்ளது எனவும் கூறினார். இதனிடையே பேசிய அவர், வருவாய் பற்றாக்குறை இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்வதே அரசின் குறிக்கோள் என்றும் அடுத்த நிதியாண்டில் நிதி பற்றாக்குறையை 3.62% ஆக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.