தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலம் ரூ.36,000 கோடி வருமானம்! – நிதித்துறை செயலாளர் முருகானந்தம்
தமிழக அரசின் 2022-23-ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தாக்கல் செய்தார். அப்போது, பட்ஜெட் உரையில் பேசிய நிதியமைச்சர், 2014 முதல் அச்சுறுத்தி வந்த வருவாய் பற்றாக்குறை இந்த ஆண்டு குறைக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக இந்த ஆண்டு 7 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை குறையவுள்ளது.
7 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக தமிழ்நாடு அரசின் வருவாய் பற்றாக்குறை 4.16%ல் இருந்து 3.08% ஆக குறைகிறது என தெரிவித்தார். இந்த நிலையில், நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக நிதித்துறை செயலாளர் முருகானந்தன், தமிழக அரசின் பொது பட்ஜெட்டில் முதல் முறையாக 7 ஆண்டுகளுக்கு பிறகு நிதி பற்றாக்குறை குறைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நிதிநிலையை எடுத்துக் கொண்டால் ஒரு இக்கட்டான ஆண்டாக உள்ளது.
வரும் ஆண்டுகளில் வருவாய் பற்றாக்குறை பற்றாக்குறை இல்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்வதே அரசின் இலக்காக உள்ளது. கொரோனா, வெள்ளம் உள்ளிட்ட பாதிப்புகளால் ஏற்பட்ட இக்கட்டான சூழலுக்கு மத்தியில் பட்ஜெட் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. நிதிப் பற்றாக்குறையை அடுத்த ஆண்டு 3.62 சதவீதமாக கொண்டுவருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இன்னும் 2 ஆண்டுகளில் 3 சதவீதத்திற்கு கொண்டு வரும் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
நிதி பற்றாக்குறையும் 3.80% ஆக குறையும். அடுத்த நிதியாண்டில் நிதி பற்றாக்குறையை 3.62% ஆக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். இதனைத்தொடர்ந்து பேசிய அவர், அரசு பள்ளி மாணவிகள் உயர்கல்வி பயில்வது குறைவாக உள்ளதால் அவர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும். தற்போது கல்லூரிகளில் 2-ஆம் ஆண்டு, 3-ஆம் ஆண்டு பயிலும் அரசுப்பள்ளி மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்தார்.
10 மாவட்டங்களில் உள்ள முன்மாதிரி பள்ளிகள், மேலும் 15 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.100 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது. வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சாலையையொட்டியுள்ள பகுதிகள் மேம்படுத்தப்படும் என்றும்பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முந்தைய ஆண்டுகளுக்கான ஜிஎஸ்டி மத்திய அரசிடமிருந்து கிட்டத்தட்ட கிடைத்து விட்டது. இந்த ஆண்டுக்கான ஜிஎஸ்டி ரூ.13,000 கோடி வர வேண்டியுள்ளது. மாநிலத்தின் வரி வருவாய் 17%-க்கும் அதிகமாக இருக்கும் என கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகள் மூலமாக கடந்த ஆண்டு ரூ.36,000 கோடி வருமானம் கிடைத்துள்ளது. இதற்கு முந்தைய ஆண்டுகளை ஒப்பிடும் போது இது 7-8 சதவீதம் அதிகம் என்றும் நிதித்துறைச் செயலாளர் முருகானந்தம் தெரிவித்தார்.