முடிவுக்கு வருகிறதா போர்? – உக்ரைன்-ரஷ்யா இடையே இன்று மீண்டும் பேச்சுவார்த்தை!
உக்ரைன் -ரஷ்யா இடையிலான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.ரஷ்ய படைகள் முக்கிய நகரங்களில் ஏவுகணை, வான்தாக்குதல்,பீரங்கி தாக்குதல் நடத்தி வருகிறது.அதே நேரத்தில் ரஷ்யாவிற்கு உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது.இது உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில்,போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே பெலாரசில் நடைபெற்ற முதல் இரண்டு பேச்சு வார்த்தைகளிலும் உடன்பாடு எட்டப்படவில்லை.இதனைத் தொடர்ந்து,நடைபெற்ற மூன்றாவது கட்ட அமைதி பேச்சுவார்த்தையிலும் எந்த முடிவும் எட்டப்படவில்லை என தகவல் வெளியாகினது.
எனினும்,உக்ரைனில் 5 நகரங்களில் போர்நிறுத்தம் செய்வதாக ரஷ்யா அறிவித்தது.மக்கள் வெளியேற்றம், மற்றும் அவர்களுக்கான உதவிகள் தொடர்பாக மேலும் சில மணி நேரங்கள் கியூ, கார்கிவ், செர்னிவ், மரியூபோல், சுமி ஆகிய நகரங்களில் போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
ஆனால்,உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் ரஷ்யா விமானங்கள் மீண்டும் தாக்குதல் நடத்தக்கூடும் என உக்ரைன் அரசு எச்சரித்தது. மேலும்,மக்கள் பாதுகாப்பான நிலவறைக்குள் சென்று பதுங்கி கொள்ளுமாறும் உக்ரைன் அரசு அறிவுறுத்தியிருந்தது.
இதனிடையே,உக்ரைன் தலைநகர் கீவ் மட்டுமல்லாமல்,பல்வேறு முக்கிய நகரங்களை ரஷ்ய படைகள் சுற்றி வளைத்துள்ளதாகவும்,அது தவிர விமான தளங்கள்,துறைமுகங்கள் ஆகியவற்றை தாக்குவதற்கு ஏற்ற வகையில் அப்பகுதிகளை சுற்றி ரஷ்யா தனது படைகளை நிறுத்தி வைத்துள்ளதாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.அதன்படி,உக்ரைனின் முக்கிய நகரங்களில் ரஷ்ய படைகள் தனது தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது.
இந்நிலையில்,போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்யாவுடன் இன்று காணொளி முறையில் உக்ரைன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. நேரடியாக நடந்த 3 கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில்,நான்காம் கட்ட பேச்சுவார்த்தை காணொளியில் நடைபெறவுள்ளது.
இந்த பேச்சுவார்த்தையிலாவது இரு நாடுகளுக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டு போர் முடிவுக்கு வருமா? என்று உலக நாடுகள் எதிர்பார்த்து காத்திருகின்றன.