அரசு உபரி நிலங்களை விற்று பணமாக்க புதிய அமைப்பு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
மத்திய அரசு வசம் உள்ள உபரி நிலங்களை விற்று வருவாய் ஈட்ட தேசிய அளவில் புதிய அமைப்பை அமைக்க பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, அரசு துறைகள் மற்றும் மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் உபரியாக உள்ள நிலங்கள் மற்றும் கட்டிட சொத்துக்களை பணமாக்க தேசிய நில பணமாக்கல் கழகம் அமைக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
பொதுத்துறை நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் வசம் உள்ள உபரி நிலங்கள், பயனற்ற கட்டங்களை விற்று அரசின் வருவாயை அதிகரிக்க திட்டம் என்றும் பயன்படுத்தப்படாத சொத்துக்கள் மற்றும் நிலங்கள் பணமாக்கப்படுவதன் மூலம் அரசுக்கு வருவாய் ஈட்ட முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குஜராத் மாநிலம் ஜாம் நகரில் பாரம்பரிய மருத்துவத்திற்கான உலக சுகாதார அமைப்பின் மையம் அமைக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.