“பெண்களுக்குக் கழக அரசு துணை நிற்கும்” – முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

Default Image

பெண்களின் கலாச்சார, அரசியல் மற்றும் சமூக பொருளாதார சாதனைகளை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் மார்ச் 8 ஆம் தேதி அன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.

அதன்படி,மார்ச் 8 ஆம் தேதியான இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.இந்நிலையில்,அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் பெண்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில்,பெண்கள், யாருடைய தயவையும் எதிர்பார்க்காமல் அவரவர்கள் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்றும்,புத்துலக ஆக்கத்தில் முன் நிற்கும் பெண்களுக்குக் கழக அரசு துணை நிற்கும் என்றும் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் கூறுகையில்:

“புத்துலக ஆக்கத்திற்கு இன்றியமையாது இருக்கும் மகளிர் அனைவருக்கும் மகளிர் நாள் வாழ்த்துகள்.இரத்த பேதம் – பால் பேதம் கூடாது என்ற முழக்கத்தோடு, ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்கான சமூக விடுதலைக்காகப் போராடும் இயக்கம் திராவிட இயக்கம்.

அந்த வகையில்,பெண்களின் சமூக – பொருளாதார உரிமைகளை மீட்டளிக்க முன்னத்தி ஏராக தி.மு.க. செயல்படுத்திய திட்டங்கள் இன்று நாட்டுக்கே வழிகாட்டியாக அமைந்துள்ளன.

சொற்களால் பெண்களைப் போற்றி, செயல்களால் அவர்களை அடிமைப்படுத்திய பழமைவாத காலம் மாறி வருகிறது.
பெண்கள் நலனும் உரிமையும் காக்கப்படும்,அதற்குத் திராவிட மாடல் அரசு என்றும் துணை நிற்கும்.

அடிமைத்தனத்தைத் தகர்த்தெறியும் வலிமைமிகு போர்க்குரல் பெண்களேதான்.பெண்கள், யாருடைய தயவையும் எதிர்பார்க்காமல் அவரவர்கள் சொந்தக் காலில் நிற்க வேண்டும்.அவர்களுக்குத் தன்மானத்தோடு வாழக்கூடிய அளவிற்குத் தன்னம்பிக்கையைத் தந்தாக வேண்டும்.அந்த அடிப்படையில்தான் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டது மகளிர் சுய உதவிக் குழுக்கள்.

இதன்மூலம்,இந்தியாவிலேயே முதன்முதலாகப் பெண்களுடைய பொருளாதார முன்னேற்றத்திற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான ஆட்சி.அந்த வகையில், புத்துலக ஆக்கத்தில் முன் நிற்கும் பெண்களுக்குக் கழக அரசு துணைநிற்கும்”,என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்