பெண்ணை விட பெருமை உடையவை வேறு எவை உள்ளது..? – ஓபிஎஸ், ஈபிஎஸ்

Default Image

நாளை நாடு முழுவதும் மகளீர் தினம் கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, மகளீர் தின வாழ்த்து தெரிவித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ஆகியோர் அறிக்கை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அந்த வாழ்த்து செய்தியில், “கடவுள் கோவிலில் சிலைகளாகவும், குடும்பத்தில் பெண்களாகவும் இருக்கிறாள்’ என்றால் அதை மறுப்போர் யாரும் இருக்க முடியுமா? அன்பு அன்னையாய், ஆருயிர் மனைவியாய், அருமை மகளாய் எத்தனை வடிவில் தோன்றினாலும் பெண் என்பவள் தெய்வம் தான்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டனுக்கு “அம்மா” என்னும் தலைவியும், தெய்வமானது அரிதினும், அரிதான அருங்கொடை அல்லவா? ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே “பெண்ணின் பெருந்தக்க யாவுள?” பெண்ணைவிட பெருமை உடையவை வேறு உண்டோ? என்று கேட்ட வள்ளுவரின் கேள்விக்கு நேற்றும், இன்றும், நாளையும் “இல்லை! பெண்ணே பெருமைக்கு உரிய இறைவனின் பெரும் படைப்பு” என்பது தானே விடையாக இருக்க முடியும்.

மாண்புமிகு அம்மா அவர்களின் நல்லாசியோடு, எங்கள் தலைமையில் நடைபெற்ற கழக அரசு, பெண்களுக்கான மகப்பேறு உதவித் திட்டத்தின் உதவித் தொகையை 12 ஆயிரம் ரூபாயில் இருந்து, 18 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியது. பணிக்குச் செல்லும் பெண்களுக்காக மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கியது. மகப்பேறு விடுமுறை காலத்தை ஒன்பது மாதங்களாக உயர்த்தியது. பெண்கள் முன்னேற்றத்தை இலக்காகக் கொண்டு அரசின் அனைத்துத் துறைகளும் முனைப்புடன் செயல்படுவதை அம்மாவின் அரசு உறுதி செய்தது.

ஆணுக்கு நிகராக மட்டும் அல்ல, ஆற்றல் அனைத்தையும் முழுமையாகப் பயன்படுத்தி, பெண் எத்தனை உயரத்திற்கு செல்ல முடியுமோ, அத்தனை உயரத்திற்குச் சென்று சீரும், சிறப்புமாக வாழ, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எந்நாளும் உழைக்கும் என்று இந்தப் பொன்னாளில் உறுதி அளிக்கிறோம்.

பெண்மை வாழ்க! ஆணுக்கு பெண் நிகர் என்று கொள்வதால் இவ்வையகம் தழைக்கும், வாழ்வு சிறக்கும் ! மகளிர் தின நல்வாழ்த்துகளை மீண்டும் கூறி மகிழ்கிறோம்.’ என தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்