விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு – மாவட்ட ஆட்சியர்
பிரதமரின் விவசாயிகளுக்கான ஆதரவு நிதி திட்டத்தின் கீழ் பணம் பெற்று வரும் விவசாயிகள் ஆதார் எண் மற்றும் தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை வருகின்ற 15-ஆம் தேதிக்குள் http://pmkisan.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் முரளிதரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக தேனி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேனி மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் பிரதமரின் விவசாயிகளுக்கான கவுரவ நிதித் திட்டத்தின் கீழ் நிலமுள்ள விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.
தேனி மாவட்டத்தில் 43.634 விவசாயிகள் இத்திட்டத்தில் பயனடைந்து வருகின்றனர். இதுவரை 10 தவணை வரை விவசாயிகள் தொகைகளை பெற்றுள்ளனர். 11வது தவணை தொகையை பெறுவதற்கு விவசாயிகளின் ஆதார் விபரங்களை சரிபார்ப்பது அவசியம் என அரசினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக விவசாயிகள் pmkisan.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து, தங்கள் அலைபேசி எண்ணுக்கு வரும் கடவு எண் மூலம் புதுப்பிக்க வேண்டும். ஆதாருடன் அலைபேசி எண்ணை இணைக்காத விவசாயிகள் அருகிலுள்ள இ-சேவை மையங்களில் ஆதார் விபரங்களைக் கொண்டு விரல் ரேகையினை பதிவு செய்து பார்த்திருக்க வேண்டும். இ-சேவை மையங்களில் இதற்கான கட்டணம் ரூ.15 மட்டுமே. விவசாயிகள் தங்கள் ஆதார் எண் விபரங்களை வரும் 15-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்து புதுப்பித்து பயனடையுமாறு தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் க.வி.முரளிதரன் தெரிவித்துள்ளார்.