மொத்தத்தில் நாடு முன்னேற்ற பாதையில் செல்லும் வகையில் மத்திய பட்ஜெட் – ஈபிஎஸ்

Default Image

குடைக்கான வரி உயர்வை ரத்துசெய்ய வேண்டும் என மத்திய பட்ஜெட் குறித்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கருத்து.

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது குறித்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மக்களுக்கு வீடு வழங்கும் திட்டம், வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு, நெடுஞ்சாலைத் துறை, 5 ஜி சேவை, 60 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது வரவேற்கத்தக்கது என்றும் நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் வகையில் பட்ஜெட் அமைந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

கங்கை-கோதாவரி-கிருஷ்ணா-காவேரி-பெண்ணையாறு நதிகள் இணைப்புத் திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், சம்பந்தப்பட்ட மாநிலங்களின் கருத்தொற்றுமை கிடைத்தவுடன் இத்திட்டங்கள் உடனடியாக செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நதிநீர் இணைப்புத் திட்டங்களுக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில், சுமார் ரூ.44,000 கோடி ஒதுக்கீடு செய்த நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீத்தாராமன் அவர்களுக்கும், எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

மாநிலங்களுக்கு வட்டியில்லாமல் கடன் தருவதற்காக, 1 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இதனை தமிழக அரசு முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். எனினும், தொடர்ந்து 9 ஆண்டுகளாக வருமான வரி உச்சவரம்பு எந்தவித மாற்றமும் இன்றி தொடர்வது, மாத வருமானம் பெறும் அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு பெருத்த ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. எனவே, வருமான வரி உச்ச வரம்பை உயர்த்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், குடைக்கு வரியை உயர்த்திவிட்டு, வைரத்திற்கு வரி குறைக்கப்பட்டுள்ளது. எனவே, குடைக்கான வரி உயர்வை ரத்துசெய்ய வேண்டும். மொத்தத்தில், மத்திய அரசின் 2022-23ம் ஆண்டுக்கான இந்த பட்ஜெட் நம் நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் வகையில் அமைந்துள்ளது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் அவர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, குடைகள் மீதான வரி 20% உயர்த்தப்பட்டுள்ளதாகவும் வெட்டப்பட்ட மற்றும் பாலிஷ் செய்யப்பட்ட வைரங்கள், கற்களுக்கான சுங்கவரி 5% ஆக குறைக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் அறிவித்திருந்தார்  குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்