“வெளிச்சந்தையில் ஒரு யூனிட் மணல் விலை இவ்வளவா?…திமுக அரசே,கட்டுப்படுத்த நடவடிக்கை எடு” – ஓபிஎஸ் வலியுறுத்தல்!
கட்டுமானத்திற்கு தேவைப்படும் முக்கியப் பொருளான மணல் விலையை திமுக அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.
வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்படும் மணலின் விலையை ஓரளவுக்குக் கட்டுக்குள் கொண்டு வர முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக தனது அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
“கட்டுமானப் பொருள்களில் மிக முக்கியமானதாக விளங்கும் சிமெண்ட், கம்பி, செங்கல்,மணல்,மரம் போன்ற பொருள்களை அத்தியாவசியப் பொருட்களின் பட்டியலில் கொண்டு வந்து பொதுமக்களுக்கு நியாயமான விலையில் கிடைக்க ஆவன செய்யப்படும் என்று தி.மு.க. அரசின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.ஆனால் நியாயமான விலையில் கிடைப்பதாகத் தெரியவில்லை. மாறாக கட்டுக்கடங்காமல் ஏறிக் கொண்டே செல்கிறது.
மேலும்,அண்மையில் ஒரு யூனிட் மணல் 1,000 ரூபாய் என நிர்ணயம் செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டதாகவும் பத்திரிகையில் செய்தி வந்தது.இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டபோது வெளிச் சந்தையில் ஒரு யூனிட் மணல் விலை 8,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது.
ஆனால்,ஒரு யூனிட் மணல் விலை 1,000 ரூபாய் என நிர்ணயம் செய்து அதற்கான புதிய வழிகாட்டுதல் முறைகளை வகுத்தபிறகு,வெளிச் சந்தையில் 8,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டிருந்த ஒரு யூனிட் மணல் விலை தற்போது சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தனியார் சிலரால் 13,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும்,குவாரியிலிருந்து கட்டுமானப் பணி நடக்கும் இடம் வரையிலான போக்குவரத்துக் கட்டணம் தான் இந்த விலை உயர்வுக்குக் காரணம் என்று கூறப்படுவதாகவும் பத்திரிகையில் செய்தி வந்துள்ளது.இதன் காரணமாக ஏழை. எளிய, நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
எனவே,மாண்புமிகு தமிழக அவர்கள் இதில் தக்க கவனம் செலுத்தி, வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்படும் மணலின் விலையை ஓரளவுக்குக் கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்”,என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
மாண்புமிகு கழக ஒருங்கிணைப்பாளர் திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்களின் அறிக்கை.
கட்டுமானத்திற்கு தேவைப்படும் முக்கியப் பொருளான மணல் விலையை கட்டுப்படுத்த திமுக அரசை வலியுறுத்தல். pic.twitter.com/S86P0pdlZJ
— AIADMK (@AIADMKOfficial) February 1, 2022