6,000 அல்ல;498 வீரர்கள் மட்டுமே உயிரிழப்பு – ரஷ்யா அறிவிப்பு
உக்ரைனில் போர் தொடங்கிய நாள் முதல் இதுவரை தங்கள் நாட்டை சேர்ந்த 498 வீரர்கள் மட்டுமே உயிரிழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து உக்கிரமாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில்,உக்ரைன் கார்கிவ் நகரில் ரஷ்யா ஆயுதம் ஏந்திய வாகனங்கள் மற்றும் பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும்,உக்ரைனின் பொருளாதார மண்டலமாக உள்ள கெர்சன் நகரை முழுமையை கைப்பற்றியதாக ரஷ்ய ராணுவம் அறிவித்தது.
இந்த நிலையில், ரஷ்ய படையெடுப்பிற்குப் பிறகு 2000-க்கும் மேற்பட்ட உக்ரேனிய பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாக உக்ரேனிய அவசர சேவை மையம் அறிவித்துள்ளது.எனினும்,உக்ரைன் ராணுவமும் ரஷ்ய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.
அந்த வகையில்,உக்ரைன் ராணுவத்தின் தாக்குதலில் கடந்த 6 நாளில் 6 ஆயிரம் ரஷ்ய படைகளைச் சேர்ந்த வீரர்கள் கொல்லப்பட்டனர் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில்,இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள ரஷ்யா,உக்ரைனில் போர் தொடங்கிய நாள் முதல் இதுவரை தங்கள் நாட்டை சேர்ந்த 498 வீரர்கள் மட்டுமே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது.மேலும்,உக்ரைனுடனான போரில் இதுவரை 1597 வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் ரஷ்யா அறிவித்துள்ளது.
இதனிடையே,உக்ரைனை சார்ந்தவர்கள் இதுவரை, 6,60,000 க்கும் அதிகமானோர் வேறு நாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர்.அண்டை நாடான போலந்தில் மட்டும் 4,00,000 பேர் தஞ்சம் அடைந்துள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.