உக்ரைனை உக்கிரமாக ரஷ்யா தாக்குவதற்கு கருங்கடல் கனவுதான் காரணமா?..!
உக்ரைனை கடுமையாக ரஷ்யா தாக்குவதற்கு அதன் கருங்கடல் கனவுதான் காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைய விரும்பிய நிலையில், அந்நாட்டிற்குள் நுழைந்து ரஷ்யா 7 வது நாளாக உக்கிரமாக தாக்கி வருகிறது.அந்த வகையில்,உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியை கைப்பற்றும் முயற்சியில் ரஷ்ய படைகள் ஈடுபட்டுள்ளன.ஆனால்,ரஷ்யாவுக்கு உக்ரைன் ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில்,உக்ரைனை கடுமையாக ரஷ்யா தாக்குவதற்கு அதன் கருங்கடல் கனவுதான் காரணம் என்று கூறப்படுகிறது.ஏனெனில், ரஷ்யாவில் உள்ள பல துறைமுகங்கள் ஆண்டு முழுவதுமான வணிக பயன்பாட்டிற்கு உகந்தவையாக இல்லை எனக் கூறப்படுகிறது. இதனால்,கருங்கடலின் கிரிமியாவில் உள்ள ஆண்டு முழுவதுமான வணிக பயன்பாட்டிற்கு உதவும் கேத்ரின் தி கிரேட் என்ற துறைமுகத்தை முதலில் ரஷ்யா குறி வைத்தது.
இதன் விளைவாக,கிரிமியாவை ரஷ்யா தன் வசமாக்கியது. வணிக நோக்கத்திற்காக மட்டும் அல்லாமல்,அடிக்கடி மோதலுக்கு ஆட்படும் மத்திய கிழக்கு நாடுகளின் பிரச்சனை தனது எல்லைக்குள் நுழைந்து விடாமல் இருக்க கருங்கடலை தான் ஒரு பாதுகாப்பு கவசமாக ரஷ்யா எண்ணுகிறது.இதனால்,பாதுகாப்பு விசயத்திலும் கருங்கடலின் மீது ரஷ்யா தனது கவனத்தை செலுத்தி வருகிறது.
இந்த சூழலில்,உக்ரைன் மற்றும் ஜார்ஜியா போன்ற நாடுகள் நேட்டோ அமைப்பில் இணைய விரும்புவதால் தனது கருங்கடல் ராஜ்ஜியம் களைவதாக ரஷ்யா எண்ணியது.
குறிப்பாக,நேட்டோ நாடுகளின் விரிவாக்கம் கருங்கடல் வழியாக தனது நாட்டிற்குள்ளும் நுழையும் என்ற ஆபத்தை ரஷ்யா உணர்ந்தது. இதனிடையே,நேட்டோவின் ஏவுகணை தடுப்பு மையம் ருமேனியாவில் அமைக்கப்பட்டது ரஷ்யாவுக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது.
இதனால்,கருங்கடல் பகுதியை தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்து பாதுகாப்பை பலப்படுத்துவதான் ஒரே வழி என்று ரஷ்யா எண்ணியது.அதன் விளைவே தற்போது உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான போர் ஆக மாறியுள்ளதாக கூறப்படுகிறது.