#BREAKING : தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமருக்கு முதல்வர் கடிதம்…!

Default Image

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமருக்கு முதல்வர் கடிதம்.

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுவித்திட நடவடிக்கை மேற்கொள்ள ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு உத்தரவிடக் கோரி பிரதமர் மோடிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் மீண்டும் மீண்டும் துன்புறுத்தப்படுவதையும், கைது செய்யப்படுவதையும் மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்களின் உடனடி கவனத்திற்கு கொண்டுவர விழைவதாகத் தெரிவித்துள்ளார்.

நமது மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் குறுகிய கால கட்டங்களில் தொடர்ந்து இதுபோன்று எதிர்கொள்ளும் துன்புறுத்தல்கள் மிகுந்த மனச்சோர்வை ஏற்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், மீனவர்கள் துன்புறுத்தப்படும் நிகழ்வுகளும் கைது செய்யப்படும் நிகழ்வுகளும் அதிகரித்து வருகின்றன என்பதைக் குறிப்பிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் பலமுறை கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளபோதிலும் இந்த நிலை தொடர்வதாகத் தனது கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளார். பாக் வளைகுடாவில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பறிக்கும் வகையிலான இலங்கைக் கடற்படையினரின் இத்தகைய நடவடிக்கைகள் ஒன்றிய அரசின் ஒருங்கிணைந்த முயற்சிகளின் மூலம் நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டுமென்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.

தொடர்ந்து மீனவர்கள் கைது செய்யப்படுவதும், அவர்களது படகுகள் சிறைபிடிக்கப்படுவதும். மீனவ சமூகத்தினரிடையே மிகுந்த விரக்தியை ஏற்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இந்த விவகாரத்தில் மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்கள் நேரடியாகத் தலையிட்டு, மீனவர்கள் மற்றும் அவர்களது மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவிக்கும் வகையில் இப்பிரச்சினையை இலங்கை அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்ல ஒன்றிய வெளியுறவு அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டுமென்று தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்