காங்கிரஸ் மீண்டும் தமிழ்நாட்டை ஆளும் – கே.எஸ்.அழகிரி
ஒருநாள் காங்கிரஸ் கட்சி கண்டிப்பாக தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியாக வரும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி நம்பிக்கை.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் கட்சி மீண்டும் தமிழ்நாட்டை ஆளும். காங்கிரஸ் கட்சி கண்டிப்பாக ஒருநாள் தமிழ்நாட்டில் ஆளும்கட்சியாக வரும். மேயர் பதவிகளை திமுகவிடம் கேட்டிருக்கிறோம். மத்தியில் 60 ஆண்டுகள் ஆண்டிருக்கிறோம், 7 ஆண்டுகள் ஆளாமல் இருப்பதும் அனுபவம்தான். பாஜக 3வது கட்சியாக அல்ல, 30வது கட்சியாக இருந்தாலும் அதற்காக கவலைப்படவில்லை. ஆனால், உரிமை கோருவதில் உண்மை இருக்க வேண்டும். ரஷ்யா- உக்ரைன் போரில் பல இந்தியர்கள் மாட்டிக்கொண்டு தவித்து வருகின்ற நிலையில், அவர்களை மீட்க விமானம் இல்லை என ஒன்றிய அரசு சொல்லுவது அசிங்கமானது என்று தெரிவித்தார்.
இதனிடையே, சத்தியமூர்த்தி பவனில் கேஎஸ் அழகிரி செய்தியாளர் சந்திப்பின்போது, முன்னாள் நிர்வாகி பிரச்சனை செய்ததை கூறப்பட்டது. மேடையிலிருந்து இறங்கும்படி முன்னாள் நிர்வாகி ராயபுரம் பன்னீர்செல்வம் கூறியதால், தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. முனுசாமி இறங்க மறுத்ததால் மோதல் ஏற்பட்ட நிலையில், பன்னீர்செல்வத்தை காங்கிரஸார் தாக்கி வெளியேற்றியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு மகத்தான வெற்றியை தமிழக வாக்காளர்கள் வழங்கியிருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சி மொத்தம் 592 வார்டுகளில் வெற்றி பெற்றிருக்கிறது. மொத்தமுள்ள 12,838 வார்டுகளில், கூட்டணியில் ஒதுக்கப்பட்ட 1,370 வார்டுகளில் மட்டுமே போட்டியிட்டு 3.31 சதவிகித வாக்குகளைப் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடப்படுகிறது.