நாட்டை விட்டு வெளியேற மாட்டேன் – களத்தில் குதித்த உக்ரைன் அதிபர்!
எனக்கு தேவை ஆயுதங்கள் தான், பயணம் அல்ல என அமெரிக்கா கூறியதற்கு உக்ரைன் அதிபர் பதில்.
சோவித் யூனியன் அமைப்பில் இருந்து உக்ரைன் தனி நாடாக பிரிந்ததை தொடர்ந்து, ஐரோப்பிய நாடுகளை உள்ளடக்கிய நேட்டோ கூட்டமைப்பில் இணைய உக்ரைன் ஆர்வம் காட்டி வந்த நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் எல்லையில் ராணுவ படைகளை குவித்து வந்தது ரஷ்யா. இதனால் கடந்த சில வாரங்களாகவே உக்ரைன் எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வந்த நிலையில், நேற்று முந்தினம் உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளைத் தொடங்க ரஷ்ய அதிபர் புதின் ரஷ்ய உத்தரவிட்டார்.
இதனைத்தொடர்ந்து, உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போரை தொடங்கியது. அதுவும் பாதுகாப்பை கருதியே ராணுவ தளங்கள், விமான தளங்களை தாக்குவதாக ரஷ்ய அதிபர் கூறினார். முதலில் வான்வெளி தாக்குதல் நடத்திய ரஷ்யா, நேற்று முதல் முழு வீச்சில் நேரடி ராணுவ படைகள் மூலம் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் உக்ரைனில் உள்ள பல பகுதிகளை ரஷ்ய படை கைப்பற்றியுள்ளது. தற்போது ரஷ்ய படைகள் உக்ரைன் தலைநகர் கீவ்-வை நெருங்கி வருகிறது.
உக்ரைன் தலைநகரைக் கைப்பற்றினால் ஒட்டுமொத்த நாட்டையும் தன் வசப்படுத்தியதைப் போல என ரஷ்யா நம்புகிறது. இதனால் உக்ரைன் தலைநகரை நோக்கி வேகமாக ரஷ்யா முன்னேறி வந்தது. நேற்றைய தினம் தலைநகர் கீவ் நகரின் வடக்கு பகுதியில் இருந்து ரஷ்ய ராணுவம் நுழைய முயல்வதாகவும் அவர்களுக்கு எதிராக உக்ரைன் ராணுவம் போராடி வருவதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. ஏவுகணை தாக்குதல் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்பட்டது.
இதனிடையே, உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு வரும் ரஷ்யாவுக்கு, உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தபோதிலும், எதையும் கண்டுகொள்ளாமல் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இதனால், ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது. நேட்டோ அமைப்பை சேர்ந்த நாடுகள் ஆதரவு தெரிவித்த நிலையில், படைகளை அனுப்புவதற்கான திட்டம் இல்லை என்றும் அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் ராணுவ உதவிகளை வழங்காமல், ஆயுதங்களை மட்டுமே வழங்குவதாக கூறப்படுகிறது.
இதனால், ரஷ்யாவை எதிர்த்து உக்ரைன் தனி நாடாக போராடி வருகிறது. இந்த சூழலில், முதல் நாடாக ஸ்வீடன் அரசு தங்களுக்கு ராணுவ உதவிகளை வழங்கியுள்ளதாகவும், தொழில்நுட்ப ரீதியிலான உதவிகளையும் ஸ்வீடன் அரசு செய்து கொடுத்துள்ளதாகவும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார். ரஷ்ய தொடர் தாக்குதலால் மக்கள் அங்குமிங்கும் அலைமோதும் சூழல் நிலவி வருகிறது. போரின் உச்சம் காரணமாக இரு நாடுகளும் விரைவில் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளது.
இந்த சூழலில் நாட்டை விட்டு வெளியேற போவதில்லை, எனக்கு தேவை ஆயுதங்கள் தான், பயணம் அல்ல என நாட்டை விட்டு வெளியேற உதவ தயாராக இருப்பதாக அமெரிக்கா கூறியதற்கு உக்ரின் அதிபர் பதிலளித்துள்ளார். ரஷ்யா மிகப் பெரிய ராணுவத்தைக் கொண்டு இருந்தாலும் கூட உக்ரைன் மிக துணிச்சலுடன் போராடி வருகிறது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ராணுவ வீரர்களைப் போன்ற உடை அணிந்து, அந்நாட்டு ராணுவ படைகளுடன் இணைந்து நாட்டிற்காக போராடி வருகிறார்.
இதனிடையே, வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்த உக்ரைன் அதிபர், நான் ராணுவத்தை சரணடைய சொல்லி விட்டதாக வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.நாட்டை விட்டு கொடுக்க போவதில்லை, எங்கள் ஆயுதங்களை கீழே போடமாட்டோம். இது எங்கள் நாடு, எண்களின் குழந்தைகளின் எதிர்காலத்துக்காக போராடுகிறோம். உக்ரைனின் நட்பு நாடுகளில் இருந்து ஆயுதங்கள் வந்து கொண்டிருக்கின்றன என்றும் தெரிவித்தார்.
மேலும், உக்ரைன் தொடர்பாக ரஷ்யா வெளியிடும் போலிச் செய்திகளை நம்ப வேண்டாம் என்றும் நானும் நம் படைகளும் “கிவ்” நகரில் தான் உள்ளோம், இறுதிவரை நாட்டிற்காக எங்களுடைய போராட்டம் தொடரும் எனவும் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.