#BREAKING: நெல்லை பள்ளி நிர்வாகிகள் மீதான வழக்கு ரத்து – நீதிமன்றம் உத்தரவு!
தாளாளரும், தலைமை ஆசிரியையும் பதவியேற்புக்கு முன்னரே கழிவறை கட்டப்பட்டுள்ளது என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை தகவல்.
கடந்த சில தினங்களுக்கு முன்பதாக, நெல்லையில் எஸ்.என்.ஹைரோட்டில் பொருட்காட்சி திடல் அருகே உள்ள தனியார் பள்ளியான சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியின் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்ததில், 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக, பள்ளியின் தாளாளர், பள்ளி தலைமை ஆசிரியர், ஒப்பந்தாரர் ஆகிய மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தியிருந்தனர்.
இதனைத்தொடர்ந்து, இந்த விபத்து தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வி இயக்குனர், மாவட்ட ஆட்சியர் அறிக்கை அளிக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த நிலையில், நெல்லையில் பள்ளியில் உள்ள கழிவறை சுவர் இடிந்து மாணவர்கள் இறந்த வழக்கில் பள்ளியின் தாளாளர், தலைமை ஆசிரியை மீதான வழக்கு ரத்து செய்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மனுதாரர்கள் இரண்டு பேரும் விபத்து நடப்பதற்கு சில மாதத்துக்கு முன்புதான் பொறுப்பேற்றுக்கொண்டனர் என்றும் கொரோனா ஊரடங்கால் பள்ளி மூடியிருந்ததால் கட்டட தன்மை பற்றி மனுதாரர்கள் அறிந்திருக்க வாய்ப்புயில்லை எனவும் உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும், தாளாளரும், தலைமை ஆசிரியையும் பதவியேற்புக்கு முன்னரே கழிவறை கட்டப்பட்டுள்ளது என்று கூறி அவர்கள் மீதான வழக்கை ரத்து செய்தது உயர்நீதிமன்றம் மதுரை கிளை.