உக்ரைன் நாட்டின் ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கையிலெடுக்குமாறு ரஷ்ய அதிபர் வலியுறுத்தல்…!
ரஷ்ய அதிபர் புடின், உக்ரைன் ராணுவம் அதிகாரத்தை கைப்பற்றும் நிலையில், பேச்சுவார்த்தை மூலம் எளிய தீர்வு எட்ட முடியும் என தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய படைகள், உக்ரைன் தலைநகர் கீவ்-வை நெருங்கி வருகிறது. அங்கு ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. அச்சம் காரணமாக ஏராளமானோர் அண்டை நாடுகளுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர். இதுவரை நடந்த தாக்குதலில் ஏராளமானோர் உயிரிழந்தும் உள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ரஷ்யாவை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தார்.
இந்த நிலையில், ரஷ்ய அதிபர் புடின், உக்ரைன் ராணுவம் அதிகாரத்தை கைப்பற்றும் நிலையில், பேச்சுவார்த்தை மூலம் எளிய தீர்வு எட்ட முடியும் என்றும், உக்ரைனில் ஆட்சி அதிகாரத்தை அந்நாட்டு ராணுவம் கையில் எடுக்குமாறு ரஷ்ய அதிபர் புதின் வலியுறுத்தியுள்ளார்.