அலங்கார ஊர்திகள் மேலும் ஒரு வார காலம் பொதுமக்கள் பார்வைக்கு இருக்கும்..!

Default Image

சென்னை மெரினா கடற்கரையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள, குடியரசுதின அலங்கார ஊர்திகள் மேலும் ஒரு வார காலம் பொதுமக்கள் பார்வைக்கு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் 26.01.2022 அன்று நடைபெற்ற குடியரசு நாள் விழாவில் செய்தித் துறை சார்பில் விடுதலைப் போரில் தமிழகத்தின் பங்களிப்பை வெளிப்படுத்தும் வகையில் தமிழக சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைக்கும் மூன்று அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள மக்கள் கண்டுகளிக்கின்ற வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 26.01.2022 அன்று அந்த ஊர்திகளை சென்னை, தீவுத்திடலில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். தமிழ்நாட்டின் பெரும்பான்மையான மாவட்ட மக்களிடையே சென்று மிகுந்த வரவேற்பினை பெற்றுள்ள இந்த அலங்கார ஊர்திகள் சென்னை மாநகர மக்கள் கண்டு களித்திடும் வகையில் சென்னை மெரினா கடற்கரை இணைப்புச் சாலையில் விவேகானந்தர் இல்லம் எதிரே பொதுமக்களின் பார்வைக்கு 20.02.2022 முதல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

நாள்தோறும் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளும் பெரும்திரளாக இந்த அலங்கார ஊர்திகளை பார்வையிட்டு வருகின்றனர். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 21.2.2022 அன்று இந்த ஊர்திகளைப் பார்வையிட்டு அங்கு பெரும்திரளாக கூடியிருந்த மாணவச் செல்வங்களுடன் கலந்துரையாடினார்.

சமூக வலைதளங்கள் மூலம் பொதுமக்கள், மாணவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு விடுத்த கோரிக்கையை ஏற்று, மேலும் ஒரு வார காலத்திற்கு அவ்விடத்தில் இந்த அலங்கார ஊர்திகள் காட்சிப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்