கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளை சந்தையில் விற்க அனுமதி!
கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளை சந்தையில் விற்க இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி.
கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பு மருந்துகளையும் வெளிச்சந்தையில் விற்பனை செய்வதற்கு நிபந்தனையுடன் கூடிய அனுமதியை இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது. கொரோனா பரவல் அதிகரிப்பை கட்டுப்படுத்தும் விதமாக இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக முன்களப்பணியாளர்கள் மற்றும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்பட்டது.
இதன்பின்னர் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது 15 வயதுக்கு மேற்பட்ட சிறார்களுக்கும் தடுப்பூசியானது செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், 60 வயது மேற்பட்டவர்கள், இணை நோயாளிகள், முன்கள பணியாளர்களுக்கு அடுத்தக் கட்டமாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்தியாவை பொறுத்தளவில், சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளுக்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்து இந்தியாவில் பெரும்பாலானோருக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளை சந்தையில் விற்க இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இதன்மூலம் மருத்துவமனை மற்றும் கிளினிக்குகளில் தடுப்பூசியை வாங்கிக்கொள்ள முடியும் என்றும் கூறப்படுகிறது.