“இனி இந்த சாலை ‘செம்மொழிச்சாலை’ என அழைக்கப்படும்” – முதல்வர் அறிவிப்பு!

Default Image

சென்னை:இனி மேடவாக்கம்- சோழிங்கநல்லூர் இணைப்பு சாலை செம்மொழிச்சாலை என அழைக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.

2010 முதல் 2019 வரை ‘கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுக்காக’ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 10 விருதாளர்களுக்கு இன்று (ஜனவரி 22 ஆம் தேதியன்று) அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற விழாவில்  தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களால் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.மேலும்,அவர்களுக்கு விருதுடன் தலா ரூ.10 லட்சத்திற்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றுடன்,கலைஞர் கருணாநிதி அவர்களின் சிறிய அளவிலான சிலையும் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,இனி மேடவாக்கம்- சோழிங்கநல்லூர் இணைப்பு சாலை செம்மொழிச் சாலை என அழைக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக,விருது வழங்கும் விழாவில் முதல்வர் கூறியதாவது:

“தமிழ் தொன்மையான மொழி என்பதைத் தமிழர்கள் சொல்லித்தான் தெரிய வேண்டிய அவசியமில்லை.உலகம் முழுவதும் இருக்கும் மொழியியல் அறிஞர்கள், இனவியல் அறிஞர்கள் அதைத்தான் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மாபெரும் உண்மை இது.

தமிழ் குறிப்பிட்ட நாட்டு மக்கள் பேசும் மொழியாக மட்டுமல்ல,ஒரு – பண்பாட்டின் அடையாளமாக இருக்கிறது நம்முடைய தமிழ் மொழியானது நிலத்துக்கு, மண்ணுக்கு,இயற்கைக்கு,மக்களுக்கு, பண்பாட்டுக்கு இலக்கணத்தை வகுத்திருக்கக்கூடிய மொழி”,என்று கூறினார்.

மேலும்,செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் புதிய வளாகம் அமைந்துள்ள மேடவாக்கம் சோழிங்கநல்லூர் இணைப்புச்சாலை இனி “செம்மொழிச்சாலை” எனப் பெயர் மாற்றம் செய்யப்படும்.செம்மொழிச் சிறப்புகளை உலகெங்கும் கொண்டு சேர்க்கும் வகையில் முதற்கட்டமாகத் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள 5 பல்கலைக்கழகங்களில் செம்மொழித் தமிழ் இருக்கைகள்` அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தமிழ் மொழிக்கு வளம் சேர்க்கும் முக்கியத்துவம் வாய்ந்த பல திட்டங்களை செம்மொழி நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது. செம்மொழி நிறுவனம் முன்வைத்துள்ள இலக்குகளை அடைய, தமிழ்நாடு அரசு எப்போதும் துணை நிற்கும்.

விருது பெற்ற தமிழறிஞர்கள் அனைவரையும் நான் மனதாரப் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்.உங்களுக்கு விருது வழங்கியதன் மூலமாகச் செம்மொழி நிறுவனம் பெருமை அடைகிறது,ஏன்,நானும் பெருமை அடைகிறேன்,தமிழ்நாடு அரசும் பெருமை அடைகிறது.

இந்த விருதின் மூலமாகத் தமிழ்மொழி மேலும் சிறப்படையப் பல்வேறு ஆக்கப்பூர்வமான பணிகளை நீங்கள் தொடர வேண்டும் என்று கேட்டுக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.பழமைக்குப் பழமையாய் -புதுமைக்கு என்றும் புதுமையாய் இருக்கக்கூடிய மொழி நம்முடைய தமிழ் மொழி”,என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்