முதலமைச்சரின் தனிப்பிரிவு – கட்டுப்பாடுகளை அறிவித்த தமிழக அரசு!

Default Image

மிகவும் அத்தியாவசிய சூழலில் மட்டுமே முதலமைச்சரின் தனிப்பிரிவில் அலுவலரை நேரில் சந்தித்து மனு கொடுக்க அனுமதிக்கப்படும்.

கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் காரணமாக முதலமைச்சரின் தனிப்பிரிவில் பொதுமக்கள் மனு அளிக்க கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக முதலமைச்சரின் தனிப்பிரிவின் தனி அலுவலர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், முதலமைச்சரின் தனிப்பிரிவில் தினமும் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பொது மக்கள் மனு அளிக்கின்றனர்.

அது தவிர முதலமைச்சரின் தனிப்பிரிவு அலுவலரை நேரில் சந்தித்தும் மனுக்களை அளிக்கின்றனர். தற்போது கொரோனா பெருந்தொற்று பரவல் வேகமெடுத்துள்ளதால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கொரோனா பரவல் அதிகரித்துள்ள சூழலிலும் பொதுமக்கள் மனுக்கள் அளிக்க வருவதால் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல் போன்ற வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுவதில் தொய்வு ஏற்படுகிறது.

எனவே பொதுமக்கள் மனுக்களை நேரடியாக வழங்குவதை தவிர்த்து, தளர்வுகள் அறிவிக்கும் வரை தலைமைச் செயலக வாயிலில் இதற்காக வைக்கப்பட்டுள்ள பெட்டியில் மட்டுமே மனுக்களை சேர்க்க அறிவுறுத்தப்படுகிறது. மிகவும் அத்தியாவசிய சூழ்நிலையில் மட்டுமே முதலமைச்சரின் தனிப்பிரிவு அலுவலரை நேரில் சந்தித்து மனு கொடுக்க அனுமதிக்கப்படும்.

மேலும் முதலமைச்சரின் தனிப்பிரிவில் பொதுமக்களிடமிருந்து தபால், இணையதளம் மின்னஞ்சல் மற்றும் முதலமைச்சர் உதவி மையம் ஆகிய வழிமுறைகளிலும் மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.

ஆகையால் கொரோனா பெருந்தொற்று வழிகாட்டி நெறிமுறைகளைக் கடைபிடிக்கும் வகையில், முதலமைச்சரின் தனிப்பிரிவில் பொதுமக்கள் தினமும் நேரடியாக மனுக்களை அளிப்பதற்காக கூடுவதை தவிர்த்து, தபால்/இணையவழி சேவைகளை பயன்படுத்தி மனுக்களை அளித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று முதலமைச்சரின் தனிப்பிரிவு தனி அலுவலர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்