ராஜேந்திர பாலாஜி ஜாமீன் வழக்கு ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்..!
ராஜேந்திர பாலாஜி ஜாமீன் வழக்கு ஜனவரி 12-க்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
அதிமுக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவினில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.3 கோடி பணமோசடி செய்ததாக அவர் மீது கொடுக்கப்பட்ட புகார் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதன்பின்னர், பணமோசடி செய்த புகாரில் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் டிசம்பர் 17-ஆம் தேதி தள்ளுபடி செய்ததால் ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக இருந்தார்.
இதனால், 8 தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடி வந்த நிலையில், சமீபத்தில் கர்நாடகாவில் ராஜேந்திர பாலாஜியை சுற்றி வளைத்து காவல்துறை கைது செய்தது. இதனையடுத்து, ராஜேந்திர பாலாஜியை விருதுநகர் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, ஜனவரி 20 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இதனைத் தொடர்ந்து, பலத்த பாதுகாப்புடன் அவரை மத்திய சிறையில் அடைப்பதற்கான ஏற்பாடு காவல்துறை தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், திடீர் திருப்பமாக மதுரை சிறைக்கு பதில் திருச்சி சிறைக்கு ராஜேந்திர பாலாஜி அழைத்து செல்லப்பட்டார்.
ராஜேந்திர பாலாஜியின் முன் ஜாமீன் மனுவை, சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்திருந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் அவர் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் ராஜேந்திர பாலாஜி விவகாரத்தில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் வருகிற 12-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது.