10,11,12 வகுப்பு மாணவர்களுக்கும் விடுமுறை?;மதுக்கடைகள் மூடல்? – ராமதாஸ் கோரிக்கை!
கொரோனா தொற்று பரவலைத் தடுக்கவும்,மாணவச் செல்வங்களை பாதுகாக்கவும் 10, 11, 12 வகுப்புகளுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் எனவும்,மக்களைக் காக்க மதுக்கடைகளை மூட வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பு காரணமாக இன்று முதல் இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 5 மணி வரை இரவுநேர ஊரடங்கு அமலில் இருக்கும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த புதிய கட்டுப்பாடுகளில்,அத்தியாவசிய பணிகளான பால்,பத்திரிகை விநியோகம்,மருத்துவமனைகள், மருந்தகங்கள், பெட்ரோல் பங்குகள், ஆம்புலன்ஸ்,அமரர் ஊர்தி, ஏ.டி.எம். போன்ற பணிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.மேலும்,
- மழலையர் காப்பகங்கள் (Creche) தவிர, மழலையர் விளையாட்டுப் பள்ளிகள் (Play Schools), நர்சரிப் பள்ளிகள் (LKG, UKG) செயல்பட அனுமதி இல்லை.
- மேலும்,அனைத்துப் பள்ளிகளிலும் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.
- மேலும்,கல்லூரி மாணவர்களுக்கும் ஜனவரி 20 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- ஆனால்,பொதுத்தேர்வு எழுதுவோரின் எதிர்கால நலன் மற்றும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு ஏதுவாக, 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும் என்பன போன்ற சில கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,கொரோனா தொற்று பரவலைத் தடுக்கவும்,மாணவச் செல்வங்களை பாதுகாக்கவும் 10, 11, 12 வகுப்புகளுக்கும் தமிழக அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக,தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:
“பேருந்துகளில் 50% பயணிகள் மட்டுமே பயணிக்க வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும் கூட, இன்று ஒவ்வொரு பேருந்திலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் பயணிக்கின்றனர். இதற்கான காரணங்களில் முதன்மையானது பள்ளிகள் இயங்குவது தான். இது கொரோனாவை கூடுதலாக பரப்பும்.
வணிக வளாகங்கள்,பெரிய கடைகளிலும் கூட்டம் கட்டுக்கு அடங்கவில்லை.தமிழ்நாட்டில் தினசரி கொரோனா தொற்று 5 ஆயிரத்தை நெருங்கி விட்டது.இது முதல் அலையின் உச்சத்தில் 80%.பொது இடங்களில் கூட்டம் கட்டுப்படுத்தப்படாவிட்டால் நிலைமை மோசமாகி விடும் ஆபத்து உள்ளது.
எனவே,கொரோனா தொற்று பரவலைத் தடுக்கவும், மாணவச் செல்வங்களை பாதுகாக்கவும் 10, 11, 12 வகுப்புகளுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும்.வணிக வளாகங்களையும், பெரிய கடைகளையும் மூடுவதற்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும்.
கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கான முதல் நடவடிக்கை மதுக்கடைகளை மூடுவதாகத் தான் இருக்க வேண்டும்.பாதுகாப்பு விதிகள் கடைபிடிக்கப்படாத மதுக்கடைகள் கொரோனாவை பரப்பும்.அதனால் மக்களைக் காக்க மதுக்கடைகளை மூட வேண்டும்”,என்று தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கான முதல் நடவடிக்கை மதுக்கடைகளை மூடுவதாகத் தான் இருக்க வேண்டும். பாதுகாப்பு விதிகள் கடைபிடிக்கப்படாத மதுக்கடைகள் கொரோனாவை பரப்பும். அதனால் மக்களைக் காக்க மதுக்கடைகளை மூட வேண்டும்!(4/4)#CloseTasmacLiquorShops
— Dr S RAMADOSS (@drramadoss) January 6, 2022