கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் தற்காலிகமாக ஒத்திவைப்பு..!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 4 நாட்கள் நடைபெற இருந்த கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்திடவும், தற்போது பரவி வரும் உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் பரவலை தடுத்திடவும் தமிழக அரசு சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமுல்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து கொரோனா நோய் தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் பரவி வரும் உருமாறிய கொரோனா ஓமைக்ரான் வைரஸ் நோயைக் கருத்தில் கொண்டும். பொது மக்கள் நலன் கருதியும் நடைமுறையில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் 10.01.2022 வரை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்திரவிட்டுள்ளது.
இதனடிப்படையில் சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தற்சமயம் தமிழ்நாடு அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் கால்நடை பராமரிப்புத்துறை கோயம்புத்தூர் மாவட்டத்தின் மூலம் 05.01.2022 முதல் 08.01.2022 முடிய 4 நாட்கள் நடைபெற இருந்த கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் தமிழக அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளின்படி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது.