முகக்கவசம் அணியாவிட்டால் கட்டாயம் அபராதம் வசூல் செய்க – மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர்!
போதிய மருத்துவ வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் மருத்துவத்துறை செயலாளர் கடிதம்.
தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், நேற்று ஒரே நாளில் 1,594 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மருத்துவத்துறை தெரிவித்திருந்தது. இதுமட்டுமில்லாமல், மறுபுறம் ஓமைக்ரான் வகை கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் தற்போது வரை 118 பேருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், 98 பேர் குணமடைந்தும், 20 பேர் சிகிச்சையிலும் உள்ளனர்.
தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதால், தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் போதிய மருத்துவ வசதிகளை ஏற்படுத்த வேண்டும் எனவும் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் அனுப்பியுள்ளார்.
தமிழகத்தில் கூடுதலாக 50 ஆயிரம் படுக்கைகள் ஏற்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். கோவிட் கேர் மையங்களை திறந்து தேவையான பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கையை முறையாக பின்பற்றாதவர்கள் மீது கட்டாயம் அபராதம் விதிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மாஸ்க் போடாதவர்களிடம் அபராதம் வசூல் செய்ய தயக்கம் காட்ட தேவையில்லை. விழிப்புணர்வு ஏற்படுத்துவதே அபராதம் வசூல் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். மேலும், கொரோனா தடுப்பூசி போடுவதை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மருத்துவத்துறை செயலாளர் கோரிக்கை வைத்துள்ளார்.