#Breaking:ரெட் அலர்ட்…மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு – முதல்வர் ஸ்டாலின் அவசர கடிதம்!
சென்னை:புயல் போன்ற ‘ரெட் அலர்ட்’ சூழ்நிலைகளை துரிதமாக முன்கூட்டியே தெரிவிக்கும் வகையில் சென்னை வானிலை ஆய்வு மையத்தை மேம்படுத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாடு அடிக்கடி வெள்ளம்,பெருமழை போன்ற இயற்கை இடர்பாடுகளினால் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு தக்க நேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதை குறிப்பிட்டு, சென்னை வானிலை ஆய்வு மையத்தின் செயல்பாட்டினை மேம்படுத்திட வேண்டும் என்று கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.
மேலும்,இது தொடர்பாக அவர் தனது கடிதத்தில் கூறியுள்ளதாவது:
“பெருமழைக் கால சூழ்நிலையில் மாநில அரசு அதனை எதிர்கொள்வது குறித்த ஒரு முக்கியமான விஷயத்தினை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.பெருமழை,கடும் புயல் போன்ற இயற்கை இடர்பாடுகளை எதிர்கொள்ள மாநில அரசு இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையை சார்ந்திருக்கின்றது என்பதை நீங்கள் அறிவீர்கள். உரிய காலத்தில் இந்த மையத்திலிருந்து பெறப்படும் முன்னெச்சரிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தினை தயார் நிலையில் வைத்திருக்கவும் அதன் மூலம் மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்யவும் ஏதுவாக அமைகிறது.ஆனால், பெருமழை குறித்த அறிவிப்புகள் உரிய நேரத்தில் சென்னை வானிலை ஆய்வு மையத்தால் வழங்க இயலாத நிலை உள்ளதை காண்கிறோம்.
உதாரணமாக 30-12-2021 அன்று மதியம் 12 மணிக்கு ஆய்வறிக்கையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இடியுடன் கூடிய மிதமான மழை காலையில் தமிழ்நாட்டில் சில பகுதிகளில் குறிப்பாக விழுப்புரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பெய்யும் என தெரிவித்து.அதே சமயம் இடியுடன் கூடிய இலேசான மற்றும் மிதமான மழை சென்னையில் சில இடங்களில் பெய்யும் எனவும் தெரிவித்திருந்தது.பின்னர் மாலை 3.40 மணிக்கு இந்த மையம் அளித்த எச்சரிக்கை அறிக்கையில் இடியுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை சென்னை,திருவள்ளூர்,காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த ஓரிரு மணி நேரங்களில் பெய்யும் என குறிப்பிட்டிருந்தது.
ஆனால், மிகக் கடுமையான மழை சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நேற்று மதியம் முதல் இரவு வரை பெய்தது.மாலை 4.15 மணிக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் “ஆரஞ்ச் அலர்ட்” வெளியிட்டது.அதற்குள் மிக அதிக கன மழை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பெய்து பல பகுதிகள் மூழ்கி அதனால் கடும் போக்குவரத்து நெரிசலும் சென்னையில் ஏற்பட்டது.
சென்னை வானிலை ஆய்வு மையத்தில் மழை குறித்து உரிய நேரத்தில் சரியாக கணக்கிட்டு எச்சரிக்கை அளிக்க போதுமான திறன் குறைபாடாக உள்ளதால் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகத்தினால் தக்க நேரத்தில் உரிய முன்னேற்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள இயலாத நிலை அடிக்கடி ஏற்பட்டுவிடுகிறது.இது பொது மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும்
மருத்துவ சேவைகள் வழங்குவதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதோடு உயிர்,உடைமை இழப்புகள் ஏற்படுவதற்கும் முக்கியமான கட்டமைப்புகள் சேதமடைவதற்கும் காரணமாக அமைந்து விடுகிறது.
இந்த நிகழ்வுகள் சென்னை இந்திய வானிலை ஆய்வு மையத்தின் வானிலை அறிக்கை தயாரிக்கும் அமைப்பினை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் அதன் தொழில்நுட்பத்தை செம்மைப்படுத்துவதில் கூடுதல் முதலீடு செய்யவேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டுகின்றன.எனவே, பெருமழை புயல் போன்ற “ரெட் அலர்ட்” சூழ்நிலைகளை துரிதமாக முன்கூட்டியே தெரிவிக்கும் வகையில் சென்னை வானிலை ஆய்வு மையம் மேம்படுத்தப்பட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.
Wrote to Hon’ble @AmitShah requesting to enhance the capacity of IMC, Chennai with advanced weather prediction mechanism and upgradation of technology to make predictions of high alert situations earlier, which is essential to take up preemptive efforts to ensure people’s safety. pic.twitter.com/q9X0oahkSd
— M.K.Stalin (@mkstalin) January 1, 2022