திமுகவின் இரட்டைவேடத்திற்கு மற்றுமோர் சாட்சி நகைக்கடன் வாக்குறுதி- ஓ.பன்னீர்செல்வம்..!

Default Image

திமுகவின் இரட்டைவேடத்திற்கு மற்றுமோர் சாட்சி நகைக்கடன் வாக்குறுதியும், தற்போதைய அறிவிப்பும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கான பொதுத் தேர்தலின்போது திமுக ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்கு உட்பட நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டது. திமுகவின் தேர்தல் அறிக்கையிலே அல்லது திமுக தலைவர் தலைப்புச் செய்தியாக வாசித்தபோது எந்தவித நிபந்தனையும் விதிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்தின்போது ஒவ்வொரு மேடையிலும் திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்களால் இந்த வாக்குறுதி எடுத்துரைக்கப்பட்டது.

முதலமைச்சரின் மகன் ஒருபடி மேலே சென்று, ‘கூட்டுறவு வங்கியில் 5 சவரன் வரை நகைக்கடன் தள்ளுபடி. நாளைக்கே போய் வாங்கிடுங்க. வரப்போவது நம்ம ஆட்சி, நம்முடைய தலைவர் தள்ளுபடி செய்திடுவாரு” என்று கூறினார். இதற்கான வீடியோ ஆதாரம் உள்ளது.  நகைக் கடன் தள்ளுபடி குறித்து அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “ஏற்கெனவே பெறப்பட்ட 48 இலட்சத்து 84 ஆயிரத்து 726 பயனாளிகளின் விவரங்களை பகுப்பாய்வு செய்ததில் 35 இலட்சத்து 37 ஆயிரத்து 693 கடனாளிகள் நகைக்கடன் பெறத் தகுதி இல்லாதவர்கள்” என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அப்படியென்றால், வெறும் 13 இலட்சத்து 47 ஆயிரத்து 33 பேர் மட்டுமே கடன் பெறத் தகுதியானவர்கள்.

இதற்கு முன்பு வெளியிடப்பட்ட அரசாணையில் 16 இலட்சம் பயனாளிகள் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. பகுப்பாய்வுக்கு பின் அதுவும் இரண்டரை இலட்சம் குறைந்துவிட்டது. அதாவது, தேர்தல் வாக்குறுதிப்படி 18 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு தள்ளுபடி செய்திருக்க வேண்டிய நகைக்கடன், நிதிநிலை அறிக்கையில் 5,000 ஆயிரம் கோடி ரூபாய் எனக் குறைக்கப்பட்டு, தற்போது அது கிட்டத்தட்ட 4,500 கோடி ரூபாய் என்ற அளவிற்கு வந்து நிற்கிறது. இதை கணக்கிடும்போது இதற்கானத் தொகை இன்னும் குறைவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

பகுப்பாய்வு குறித்து ஏன் தேர்தல் அறிக்கையில் சொல்லவில்லை..? பகுப்பாய்வு குறித்து ஏன் மேடைக்கு மேடை பிரச்சாரம் செய்யவில்லை..? நகைக் கடனை வாங்கத் தூண்டும் வகையில் ஏன் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது? என்ற கேள்விகள் தற்போது மக்கள் மனங்களில் எழுந்துள்ளன.  தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்தபிறகு பகுப்பாய்வு செய்ததைப் போல் பகுப்பாய்வு செய்யாமல் வாக்களித்துவிட்டோமே, பகுப்பாய்வு நாம் செய்திருந்தால் திமுக ஆட்சிக்கே வந்திருக்காதே, நாமெல்லாம் ஏமாற்றப்பட்டு இருக்கமாட்டோமே என்று மக்கள் நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

எனவே விண்ணப்பித்த அனைவருக்கும் தேர்தல் வாக்குறுதிப்படி நகைக்கடனைத் தள்ளுபடி செய்து கடன் சுமையிலிருந்து விடுவிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 15042025
Today Live 14042025
Madurai MP Su Venkatesan
Harris Jayaraj
Nellai Palayamkottai 8th student
MK Stalin
sanjiv goenka rishabh pant
Porkodi Armstrong