#Breaking:முதல் முறையாக புதுச்சேரியில் 2 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி!
புதுச்சேரி:முதல் முறையாக 2 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வரும் நிலையில்,இத்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று 578 ஆக இருந்த நிலையில்,இன்று 653 ஆக உயர்ந்துள்ளதாகவும், அதில் 186 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும்,மீதமுள்ள 467 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறையால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்த நிலையில்,முதல் முறையாக 2 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
அதன்படி,80 வயது முதியவர் மற்றும் 20 வயது இளைஞருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.தற்போது இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் உள்ளனர் என்றும்,எனினும் அவர்கள் இருவரும் நலமாக உள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மேலும்,இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.வெளிநாடு செல்லாத நிலையில் இவர்களுக்கு ஒமைக்ரான் எதனால் பரவியது என்பது குறித்தும் தகவல் சேகரிக்கும் பணியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.