அரசு சார்பில் ஏர் ஆம்புலன்ஸ்? – டெண்டர் கோரிய தமிழக அரசு!
தமிழக அரசின் பெல்(BELL) 412 EP ரக ஹெலிகாப்டரை பராமரிக்க தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது.
தமிழக அரசிடம் கடந்த ஆகஸ்ட் 2006 ஆம் ஆண்டு முதல் பெல் 412 ep ரக ஹெலிகாப்டர் ஒன்று உள்ளது.சென்னை மீனம்பாக்கத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்த ஹெலிகாப்டர்,கடந்த நவம்பர்,2019 ஆம் ஆண்டு முதல் இயக்கப்படாமல் உள்ளது.அரசு முறைப் பயணங்களுக்காக அப்போதைய முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அவர்கள் பயன்படுத்தப்படுத்திய இந்த ஹெலிகாப்டர்,இதுவரை 2,449 மணி நேரம் பறந்துள்ளதாக கூறப்படுகிறது.இந்த ஹெலிகாப்டர் 14 பேர் பயணிக்கக்கூடிய வகையில் பேரிடர் காலங்கள், அவசர பயணங்களுக்கு பயன்படுத்தும் வகையில் தயார் செய்யப்பட்டது.
இந்த ஹெலிகாப்டரை,ஏர் ஆம்புலன்ஸாக மாற்றி மருத்துவ பயன்பாட்டிற்கு பயன்படுத்துவது தொடர்பாக ஏற்கனவே தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தி்ல் விவாதிக்கப்பட்டு,இந்த ஹெலிகாப்டரை ஏர் ஆம்புலன்ஸாக பயன்படுத்துவது தொடர்பாக திட்டமிட்டனர்.
இந்நிலையில்,முதற்கட்டமாக,தமிழக அரசின் பெல்(BELL) 412 EP ரக ஹெலிகாப்டரை பராமரிக்க தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது. அதன்படி,தொடர்ந்து காற்று தகுதி மேலாண்மை அமைப்பு(CAMO) அனுமதியுடன் அனுபவம் வாய்ந்த ஹெலிகாப்டர் பராமரிப்பு நிறுவனங்களிடமிருந்து சீல் செய்யப்பட்ட டெண்டர்கள் வரவேற்கப்படுகின்றன என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும்,டெண்டர் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 06.01.2022 அன்று மாலை 3.00 மணி வரையுடன் முடிவடைய உள்ளதாகவும்,டெண்டர் அட்டவணை மற்றும் கூடுதல் விவரங்களை http://www.tenders.tn.gov.in/ என்ற இணையதளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக,நிலுவைத் தேதி மற்றும் குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு பெறப்பட்ட ஏலங்கள் சுருக்கமாக நிராகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.