கடும் அமளி:நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஒரு நாள் முன்னதாகவே நிறைவு!

Default Image

டெல்லி:நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்,எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் முன்கூட்டியே இன்று நிறைவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில்  “கட்டுப்பாடற்ற முறையில்” நடந்து கொண்டதாக கூறி 12 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து,நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 29 ஆம் தேதி தொடங்கிய நிலையில்,முதல் நாளில் இருந்தே 12 எம்பிக்கள் இடைநீக்கத்தை ரத்து செய்யக்கோரி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கடும் அமளியில் ஈடுபட்டன.

இதற்கிடையில்,வேளாண் சட்ட ரத்து மசோதா நிறைவேற்றப்பட்டது.இதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும்,செயற்கை கருத்தரித்தல் சட்ட திருத்த மசோதா,தேர்தல் சட்டங்கள் (திருத்தம்) மசோதா போன்ற முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால்,வாக்களார் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு வழி வகை செய்யும் இந்த தேர்தல் சட்ட திருத்த மசோதா ஜனநாயகத்திற்கு ஆபத்தானது என்று கூறி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுப்பட்டனர்.

அதே நேரத்தில்,பெண்களின் திருமண வயதை 18 லிருந்து 21 ஆக உயர்த்தும் மசோதா மத்திய அமைச்சரவை ஒப்புதலுடன் நாடாளுமன்ற நிலைக்குழு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில்,நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை வரை நடைபெறும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்,முன்கூட்டியே இன்று நிறைவு செய்யப்பட்டுள்ளது.

12 எம்பிக்கள் இடைநீக்கம் ரத்து தொடர்பாகவும்,நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு மற்றும் லக்கிம்பூர் கெரி வன்முறை விவகாரத்தில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும் என்றும் கூறி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கடும் அமளியில் ஈடுபட்டதால்,முன் கூட்டியே குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு செய்யப்பட்டுள்ளது.அதன்படி,நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து,பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரில்,மக்களவை 82% உற்பத்தித்திறனைப் பதிவுசெய்தது என்றும் மாநிலங்களவை 47% உற்பத்தித்திறனை பதிவு செய்தது என்றும் மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்