“மீண்டும் ஒரு பேரிடர்…கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட வேண்டும்” – ஓபிஎஸ் வலியுறுத்தல்!

Default Image

பிற மாநிலங்களில் உள்ள விமான நிலையங்களில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையிலும்,அவர்கள் தமிழ்நாட்டிற்குள் நுழையும் போது,அவர்களைக் கண்டறிந்து கட்டாயம் பரிசோதனைக்கு உட்படுத்தவேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

ஒமைக்ரான் வைரஸ் பரவத் துவங்கினால் மீண்டும் ஒரு பேரிடரை சந்திக்க வேண்டியிருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள் என்றும், எனவே,தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தனிக் கவனம் செலுத்தி, ஒமைக்ரான் பரவலை வெகுவாகக் கட்டுப்படுத்திட ஏதுவாக வெளிநாடுகளிலிருந்து விமானம் மூலமாக தமிழ்நாட்டிற்குள் நேரடியாக வருபவர்களையும்,வேறு மாநிலத்திற்கு விமானம் மூலமாக வந்து தரை வழியாகவோ அல்லது இரயில் மூலமாகவோ தமிழ்நாட்டிற்குள் வருபவர்களையும் பரிசோதிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்றும்,கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டுமென்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக தனது அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

“கொரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஒருபுறம் குறைந்து கொண்டே வருவது ஆறுதலை அளித்தாலும், மறுபுறம் தமிழ்நாட்டில் ஒமைக்ரான் தொற்று இல்லை என்ற நிலையிலிருந்து, ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டு, சிலருக்கு அதற்கான அறிகுறி கண்டறியப்பட்டு உள்ளதாக வருகின்ற செய்திகள் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

இந்தியாவைப் பொறுத்த வரையில்,ஒமைக்ரான் பரவலைத் தடுக்கும் வண்ணம்,மிக ஆபத்தான நாடுகள் என்று கருதக்கூடிய ஐரோப்பிய நாடுகள்,யுனைடெட் கிங்டம்,தெற்கு ஆப்பிரிக்கா,பிரேசில்,பங்களாதேஷ், போஸ்ட்வானா,சீனா,மொரீசியஸ்,நியூசிலாந்து,சிம்பாப்வே,ஹாங்காங் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.மற்ற பயணிகளைப் பொறுத்தவரையில்,அங்கொன்றும் இங்கொன்றுமாக இரண்டு விழுக்காடு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இந்தச் சூழ்நிலையில், குறைந்த ஆபத்துள்ள நாடுகளான காங்கோ, நைஜீரியா போன்ற நாடுகளிலிருந்து வருபவர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால்,வெளிநாடுகளிலிருந்து விமானம் வாயிலாக வரும் அனைவருக்கும் பரிசோதனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு அனுமதி கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.இது வரவேற்கத்தக்கது.

அதே சமயத்தில்,மிகுந்த ஆபத்துள்ள மற்றும் குறைந்த ஆபத்துள்ள நாடுகளிலிருந்து இந்தியா வரும் வெளிநாட்டுப் பயணிகள் விமானம் வாயிலாக இந்தியாவில் உள்ள வேறு மாநிலத்தில் இறங்கி அங்கிருந்து சாலை மார்க்கமாகவோ அல்லது ரயில் மூலமாகவோ தமிழ்நாட்டிற்கு வரும் பயணிகளும் இருப்பார்கள்.அவர்களுக்கு ஏற்கெனவே மற்ற மாநிலங்களில் உள்ள விமான நிலையங்களில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இருந்தாலும்,அவர்கள் தமிழ்நாட்டிற்குள் நுழையும் போது,அவர்களைக் கண்டறிந்து கட்டாயம் பரிசோதனைக்கு உட்படுத்தவேண்டும்.ஏனெனில், வேறு மாநில விமான நிலையங்களில் மேற்கொண்ட பரிசோதனைக்குப் பிறகு கூட அவர்களை தொற்று தாக்கும் வாய்ப்பு இருக்கிறது.

எனவே,அண்மையில் வெளிநாடுகளிலிருந்து விமானம் மூலம் இந்தியா வந்திறங்கி,அதன் பிறகு ஓரிரு நாட்கள் கழித்து சாலை வழியாகவோ, இரயில் மூலமாகவோ தமிழ்நாட்டிற்கு வந்தவர்களையும், வருகின்றவர்களையும் கொரோனா தொற்றுப் பரிசோதனைக்கு உள்ளாக்க வேண்டும்.அந்தப் பரிசோதனையில் தொற்று இல்லை என்றால் ஏழு நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தி, எட்டாவது நாளில் மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.அதற்குப் பிறகும் தொற்று இல்லை என்றால் அவர்களை வெளியில் செல்ல அனுமதிக்கலாம்.

மாறாக,கொரோனா பரிசோதனை கொள்ளப்பட்டு தொற்று உறுதி செய்யப்பட்டால் அவர்களை மருத்துவமனையில் அனுமதிப்பதோடு, அவர்களுக்கு ஒமைக்ரான் தொற்று இருக்கிறதா என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ப சிகிச்சை அளிக்க வேண்டும். இது மட்டுமல்லாமல் அவர்களோடு தொடர்பில் உள்ளவர்களையும் பரிசோதனைக்கு உட்படுத்தி, பரிசோதனை முடிவின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் ஒமைக்ரான் பரவலை இன்னும் வெகுவாகக் கட்டுப்படுத்த முடியும்.

டெல்டா வைரஸைவிட ஒமைக்ரான் வேகமாகப் பரவக்கூடியது என்றும், ஏற்கெனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்,தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களையும் இது தாக்கும் என்றும்,இந்தப் பரவலை ஓரளவுக்கு கட்டுப்படுத்திவிட்டால் 2022 ஆம் ஆண்டில் இந்தத் தொற்று முடிவுக்கு வந்துவிடும் என்றும் உலக சுகாதரர அமைப்புத் தெரிவித்துள்ளது. ஒமைக்ரான் வைரஸ் பரவத் துவங்கினால் மீண்டும் ஒரு பேரிடரை சந்திக்க வேண்டியிருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.இதைக் கட்டுப்படுத்துவதற்கு ஒரே வழி கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட வேண்டும்.

முகக் கவசம் அணிதல்,சமூக இடைவெளியை கூடுவது தவிர்க்கப்படுதல், கைகளைக் கழுவுதல்,கூட்டம் பின்பற்றுதல்,ஆகிய கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்தாலும்,அவைகள் கடைபிடிக்கப்படுவதில்லை என்பதுதான் யதார்த்தம்.ஐம்பது விழுக்காட்டிற்கு மேற்பட்ட மக்கள் முகக் கவசம் அணிவதில்லை.இதற்கான விழிப்புணர்விலும் தொய்வு இருப்பது கண்கூடாகத் தெரிகிறது. இந்த வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் கண்டிப்பாக கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்வதும், தடுப்பூசி செலுத்தியவர்களும் கவனமாக இருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதும்,தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு விரைந்து செலுத்துவதும் தமிழ்நாடு அரசினுடைய கடமை.

எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் தனிக் கவனம் செலுத்தி, ஒமைக்ரான் பரவலை வெகுவாகக் கட்டுப்படுத்திட ஏதுவாக வெளிநாடுகளிலிருந்து விமானம் மூலமாக தமிழ்நாட்டிற்குள் நேரடியாக வருபவர்களையும்,வேறு மாநிலத்திற்கு விமானம் மூலமாக வந்து தரை வழியாகவோ அல்லது இரயில் மூலமாகவோ தமிழ்நாட்டிற்குள் வருபவர்களையும் பரிசோதிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்றும், கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்க
வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன். இந்த நடவடிக்கை நாட்டு மக்களையும், நாட்டின் பொருளாதாரத்தையும் பாதுகாக்க வழிவகுக்கும்”,என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

pongal Train
Puducherry - Pongal 2025
Sakshi Agarwal Marriage Clicks
AlluArjun
TVK Vijay
Viluppuram - Protest