ஆசிரியரின் செயல் கண்டிக்கத்தக்கது – ராமதாஸ் ட்வீட்!

Default Image

கோவையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் மாணவனை ஆசிரியர் தாக்கியது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்.

கோவை மாவட்டம் கணபதியிலுள்ள தனியார் பள்ளி ஒன்றில் நேற்று 11ஆம் வகுப்பு மாணவனை அப்பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் வகுப்பறையில் கடுமையாக அடித்ததாக கூறப்படுகிறது. மாணவனுக்கு பள்ளியில் கொடுக்கப்பட்ட சீருடையை ஆல்ட்டர் செய்து இறுக்கமாக அணிந்திருந்ததால் ஆசிரியர் சுமார் 20 நிமிடங்கள் வைத்து அடித்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, வீட்டுக்கு சென்ற மாணவனுக்கு கடுமையான வலி ஏற்பட்டிருக்கிறது. பின்னர் பெற்றோர்கள் விசாரித்ததில் பள்ளியில் ஆசிரியர் அடித்தது தெரியவந்தது. இதன்பின் ஆசிரியர் மீது பெற்றோர்கள் மாநகர காவல்துறையிடம் புகார் அளித்தனர். மேலும், அந்த மாணவனை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்திருக்கின்றனர் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், கோவை கணபதியில் உள்ள தனியார் பள்ளியில் இறுக்கமான ஆடை அணிந்ததற்காக 11-ஆம் வகுப்பு மாணவனை இயற்பியல் ஆசிரியர் 20 நிமிடங்கள் தாக்கியதில் மாணவன் கடுமையான காயங்கள் மற்றும் வலியுடன் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆசிரியரின் செயல் கண்டிக்கத்தக்கது. ஆசிரியர்கள் மாணவர்களிடம் கண்டிப்பு காட்ட வேண்டும், தவறு செய்தால் தண்டித்து நல்வழிப் படுத்த வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், இரு மாணவனை 20 நிமிடங்களுக்கு மேலாக ஆசிரியர் தொடர்ந்து தாக்குவது மனிதத்தன்மையற்ற செயல்.

இதை அனுமதிக்கக் கூடாது. காயமடைந்த மாணவருக்கு தரமான மருத்துவம் அளிக்கப்பட வேண்டும். தவறு செய்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியர்களுக்கு கனிவுடன் நடந்து கொள்வது குறித்து உரிய பயிற்சிகளும், கலந்தாய்வுகளும் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்