#HelicopterCrash:பெங்களூரு அழைத்துச் செல்லப்படும் கேப்டன் வருண் சிங்!

நீலகிரி:ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிருடன் மீட்கப்பட்ட கேப்டன் வருண் சிங் அவர்கள் உயர் சிகிச்சைக்காக பெங்களூரு அழைத்துச் செல்லப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குன்னூர் அருகே நேற்று நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில்,அதில் பயணித்த 14 பேரில் முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.மேலும்,விபத்தில் சிக்கி தற்போது உயிரோடு உள்ள ஒரே ராணுவ அதிகாரி கேப்டன் வருண் சிங் 80 சதவிகித காயங்களுடன் வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும்,முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேரின் உடல்கள் இறுதி அஞ்சலிக்கு பிறகு 13 ஆம்புலன்ஸில் தனித்தனியே ஏற்றப்பட்டு சூலூர் விமானப்படை தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில்,கேப்டன் வருண் சிங் அவர்கள் உயர் சிகிச்சைக்காக பெங்களூரு அழைத்துச் செல்லப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும்,ராணுவ ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் 1 மணி நேரத்திற்கு மேலாக ஆய்வு செய்த தடவியல் துறை அதிகாரிகள் விபத்து மாதிரிகளை சேகரித்து விட்டு ஆய்வை நிறைவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில்,விபத்து தொடர்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களிடம்,மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.