கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டும்தான் ரேஷன் பொருட்களா? – அமைச்சர் சக்கரபாணி விளக்கம்!
திருவாரூர்:கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்ற தகவல் தவறானது என்று அமைச்சர் சக்கரபாணி விளக்கம் அளித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி,தற்போது கொரோனா பரவல் முன்பை விட ஓரளவுக்கு குறைந்துள்ளது.
இதற்கிடையில்,தென்னாப்பிரிக்காவில் ஒமிக்ரான் என்ற உருமாறிய கொரோனா தொற்று உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பரவி அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில்,இந்தியாவிலும் பரவத் தொடங்கியுள்ளது.
இந்த வேளையில்,தமிழகத்தில் இனி கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்ற செய்தி சமூக வலைதளங்களில் பரவி பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில்,திருவாரூர் அருகே இளவங்கார்குடியில் புதிய ரேஷன் கடையினை நேற்று உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி திறந்து வைத்தார்.
அதன்பின்னர்,செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சக்கரபாணி அவர்கள் கூறியதாவது:”ஒரே நாடு,ஒரே ரேசன் என்ற திட்டத்தின் மூலம்,தமிழகத்தில் உள்ள ரேசன் குடும்ப அட்டைதாரர்கள் 97% பயோ மெட்ரிக் முறையைப் பயன்படுத்துகின்றனர்.இந்த ஆண்டில் 3 லட்சம் மெட்ரிக் டன் நெல் கூடுதலாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும்,கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருள் வழங்கப்படும் என்று சமூக வலைதளங்களில் பரவிய செய்தி தவறானது.அது வெறும் வதந்தி.
எனினும்,தற்போது வேகமாகப் பரவி வரும் ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்”, என்று கூறினார்.